Wednesday, January 5, 2011

இது ரசிக்க

புலவர் ஒருவர் அரசனுடன் விருந்துண்டார்.அப்போது அங்கு அரசி வந்தார்.புலவர்,''தங்கச்சி வந்தியா?''என்று கேட்டார்.புலவர் அரசியை உறவு முறை கொண்டாடுவது அரசனுக்குப் பிடிக்காதலால் புலவரை முறைத்தான்.அதைப் புரிந்து கொண்ட புலவர் உடனே,''உங்கள் தலையில் இருப்பது தங்கச் சிவந்தியா?என்று கேட்டேன்''என்றார் சமயோசிதமாக.
***********
ஒரு புலவர் தன நண்பனைக் காண அவரது இரும்புப் பட்டறைக்குச் சென்றார்.நண்பர் அவரைப் பார்த்து,''வாரும்,இரும்படியும்,''என்றார்.புலவரோ திடீரென இரும்படிக்கச் சொல்கிறாரே எனத் திகைத்தார்.நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் சொன்னது விளங்கவில்லையா?நீர் புலவர் அல்லவா?அதனால் வாரும்,இரும்,படியும் என்றேன்,''என்றார்.
***********
அரசர், புலவர் ஒருவருக்கு பணத்தைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்தார்.புலவர் பணத்தை எடுத்துக் கொண்டு கேட்டார்,''பணத்தட்டு யாருக்கு?''பணத்தட்டு என்றால் பணம் இருந்த தட்டு என்றும் பண முடை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.தமக்கே பணமுடை என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்ற எண்ணத்திலரசன் ,'உமக்கே,'என்றாராம்.தட்டை உடனே எடுத்துக் கொண்ட புலவரின் சாமர்த்தியம் எப்படி?
************
புலவர்கள் கூட்டத்திற்கு கடைசியாகத் தாமதமாகக் கடைமடை என்ற ஊரிலிருந்து ஒரு புலவர் வந்தார்.மடாதிபதி அவரை,''வாரும்,கடைமடையரே!''என்று வரவேற்றார்.புலவர் உடனே,'வணக்கம்,மடத்தலைவரே!'என்று பதிலுரைத்தார்.
************
முந்தைய தினம் சுட்ட உளுந்த வடையை கணவனிடம் மனைவி கொடுத்தாள்.கணவன் அதைக் கையில் எடுத்தான்,புட்டான்,இழுத்தான்,திரும்ப ஒட்டினான்,மனைவியிடம் கொடுத்தான்.மனைவி,''என்னங்க,வடை ஊசி இருக்கா?''என்று கேட்டாள்.கணவன்,'ஊசி மட்டும் இல்லை,நூலும் இருக்கு தையலுக்கு உதவுமே என்று தான் திரும்பக் கொடுத்தேன்,'என்றான்.ஊசியும் நூலும் தையலுக்கு உதவும் தானே.தையல் என்றால் பெண் என்ற பொருளும் உண்டு.
************
ஒரு புலவர் சாகக் கிடந்தார்.வைத்தியர்,'இனி அவர் பிழைக்க மாட்டார். பாலைத்துணியில் நனைத்து துளித் துளியாக வாயில் விடுங்கள்,'என்றார்.
அதேபோல் புலவரின் பெண்ணும் கொடுத்தார்.புலவர் முகத்தைச் சுளித்தார்.
''அப்பா,பால் கசக்கிறதா?''என்று மகள் கேட்டார்.புலவர் சிரித்துக்கொண்டே சொன்னார்,'மகளே,பாலும் கசக்கவில்லை,துணியும் கசக்கவில்லை.'துணி கசக்காதலால் (துவைக்காதலால்)அவ்வளவு அழுக்கு!
*************
ஒருவன் நண்பனிடம்,'ஏனப்பா,நானூறு ரூபாய் தருகிறேன் என்றாய்.பின் முன்னூறு தருகிறேன் என்றாய்.அதன் பின் இருநூறு தருகிறேன் என்றாய்.ஆனால் இப்போதோ,வெறும் நூறு ரூபாய் தருகிறாயே,'என்றான்.
நண்பன் சொன்னான்,''நான் எப்போதுமே நூறு ரூபாய் தான் தருவதாகச் சொன்னேன்.நீ தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
நான் நூறு(நான்+நூறு=நானூறு)ரூபாய் தருகிறேன் என்றேன். பின்னர்
முன் நூறு (முன்+நூறு=முன்னூறு)ரூபாய் தருவதாகச் சொன்னபடி கொடுக்கிறேன் என்றேன்.பின்னர் நீ வந்த பொது,இரு,நூறு (இரு+நூறு=இருநூறு)ரூபாய் தருகிறேன் என்றேன்.சொன்னபடி நூறு ரூபாய் தந்தேன்.''
***********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment