Sunday, July 11, 2010

குடும்ப ரகசியம்

ஆப்கானிஷ்தானத்தின் அரசன் ஒரு போருக்கு தயார் செய்து கொண்டிருந்தான்.தனக்கு மிகக் கூர்மையான கத்தி ஒன்று செய்யச் சொல்லி ஆணையிட்டான்.ஒருவன் ஒரு கத்தியைக்  கொண்டு வந்து காட்டி,'வானத்தில் ஒரு முடியை எறிந்து அது இறங்கும் போது இக்கத்தியால் அதை இரண்டாக வெட்ட முடியும் என்று கூறி அதை செயல் படுத்திக் காட்டினனான்.அரசனுக்கு திருப்தி.அப்போது அங்கு அருகிலிருந்த ஒரு கண் பார்வையற்றவர்,'இது போருக்குப்  பயனற்றது,'என்றார்.அரசன்,''நீயார்?இது பயனற்றது என்று உனக்கு எப்படித் தெரியும்?''என்று கேட்டான்.'இந்த கத்தி கொண்டு வரப்படும் போது தற்செயலாக என்னை உரசிச் சென்றது.உடனே இது உடையக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டேன்.'என்று பார்வையற்றவர் சொன்னார்.அரசன் அதை சோதித்துப் பார்க்கையில் அது உடைந்து விட்டது.''நல்ல வேலை என்னைக் காப்பாற்றினாய்.இந்தக் கத்தியை வைத்து நான் போரிட்டிருந்தால் நன் உயிரோடு திரும்பியிருக்க முடியாது.சரி,நீ சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?''என்று அரசன் கேட்க பார்வையற்றவரும் தான் பிச்சை எடுப்பதாகக் கூறினார்.உடனே அரசன்,''நாளையிலிருந்து சாப்பாட்டு நேரத்தில் அரண்மனைக்கு வா.உனக்கு இரண்டு சப்பாத்தி கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்,''என்று கூற பார்வையற்றவரும் நன்றி கூறிச் சென்று விட்டார்.
பின் போரில் அரசன் வெற்றி பெற்று வந்தான்.அந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனின் அழகான பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தான்.திருமணத்தின் போது அந்தப் பார்வையற்ற பிச்சைக்காரனையும் பார்த்தான்.அவரைத் தனியே அழைத்து,'' ,''இந்தத் திருமணம் பற்றி என்ன நினைக்கிறாய்?''என்று கேட்டான்.அவரும்,'சில நாட்களுக்கு முன் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த காவலர்கள் என்னை விரட்டினார்கள்.ஆனால் இந்தப் பெண் என்னை தோளைப் பிடித்து அழைத்துச் சென்று எனக்கு சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்தாள்.என்னைத் தொட்டபோது அவளைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.அவள் உனக்கு நல்ல மனைவியாக இருப்பாள்.அவள் உங்களுக்கு மட்டுமே ஏற்றவள்.வேறு எந்த அரசருக்கும் ஏற்றவளாக இருக்க முடியாது.'என்றார்.அரசனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
சில மாதங்களுக்குப் பின் அந்த பார்வையற்றவரை  அழைத்து வரச் சொல்லி,அவரிடம்,''அன்று என் மனைவி எனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்று சொன்னாயே,அது பற்றி விபரமாகச் சொல்,''என்றான்.'தங்கள் மனைவி சிறந்த பெண்;ஆனால் அவள் பணக்கார வீட்டுப்பெண் அல்ல.அவளுடைய தந்தை ஒரு சாதாரண நெசவாளி.'என்ற பதில் வந்தது.அரசனுக்கு அதிர்ச்சி.தீவிர விசாரணையில் அவன் மனைவி ஒரு நெசவாளியின் பெண் என்பதும் பணக்காரரால் ஸ்வீகாரம் எடுக்கப்பட்டவள் என்பதும் தெரிய வந்தது.
அரசன் மீண்டும் பார்வையற்றவரை வரவழைத்து,''என் மனைவி எனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்றும் வேறு யாருக்கும் பொருத்தமாக மாட்டாள் என்றும் சொன்னதற்குக் காரணம் என்ன?''என்று கேட்டார்.'நீங்களும் அரச குடும்பத்தில் வந்தவரல்ல.உங்கள் தந்தை ஒரு சாதாரண வியாபாரி,''என்றார்.அரசனுக்கு மீண்டும் அதிர்ச்சி.ரகசியமாய் விசாரித்ததில் அது உண்மை என்பது தெரிந்தது.அவன் பார்வையற்றவரிடம்,''இதுவரை நீ சொன்னதெல்லாம் உன் தொடு உணர்ச்சியினால் தான்.ஆனால் என்னை இதுவரை என்னைத் தொட்டதில்லை.எப்படி என்னைப் பற்றி சரியாகச் சொன்னாய்?''என்று கேட்டார்.'நம்முடைய வார்த்தைகளும்  செயல்களும் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும்.நான் தங்கள் உயிரைக் காப்பாற்றினேன்.அதற்கு எனக்கு என்ன பரிசு?தினமும் இரண்டு சப்பாத்தி.அரச பரம்பரையில் வந்த ஒருவரானால், உயிரைக் காப்பாற்றியதற்கு மிகப் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பார்.அதனால் நீங்கள் அரச குடும்பத்தில் பிறந்திருக்கமுடியாது;ஒரு வியாபாரியின் பையனாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.'என்று விளக்கினார் அந்த பார்வையற்றவர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net