கங்கா நீராடல்! இந்துக்களின் புனித நதி கங்கை. கங்கையில் குளிக்க, பாவம் போகும் என்பது ஐதீகம். ஆனால், எல்லாரும் கங்கையில் போய் நீராடுவது கடினம். எனவே, அந்த கங்கையே நம் வீட்டிற்கு வந்தாள். ஆம்... தீபாவளி அன்று மட்டும் வெந்நீரில் கங்கையும், நல்லெண்ணெயில் திருமகளும் இருப்பதாக ஐதீகம். மற்ற நாட்களில் தலை குளிப்பது என்றால் சூரிய உதயத்திற்கு பின் குளிக்க வேண்டும். ஆனால், தீபாவளி அன்று மட்டும் நடு இரவு தொடங்கி விடியும் முன்னரே தலை குளித்து விட வேண்டும். இவ்வாறு லட்சுமியை நினைத்து, எண்ணெய் தேய்த்து புனித கங்கையான வெந்நீரில் குளிக்க, நம் பாவங்கள் போய், செல்வம் வந்து சேரும். பெண்கள் இவ்வாறு மேற்கொள்ள, வீட்டில் செல்வம் பெருகும், துன்பம் பறந்து விடும். *** தீபாவளி அன்று ! தமிழகத்தில் தீபாவளி அன்று சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவர். ஆனால், குஜராத் மாநிலத்தில், தீபாவளி தினத்தன்று யாரும் பட்டாசைப் பற்றி நினைப்பது இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை தீபாவளி அன்று விதவிதமான பட்டங்கள் செய்து, வானில் பறக்கவிட்டு, ஆனந்தமாகத் தீபாவளியை கொண்டாடுகின்றனர். *** மகாலட்சுமி பூஜை! லட்சுமி பூஜை மிகவும் முக்கியமான பூஜை. தீபாவளி அன்று கங்கை நீராடலுக்கு பின், லட்சுமியை வணங்க வேண்டும்.பிரகலாதனின் பேரன் பலி சக்கரவர்த்தி, தேவர்களையும், மகாலட்சுமியையும் சிறைவைத்து இருந்தான். வாமன அவதாரம் எடுத்து, பலி சக்கரவர்த்தியை பாதாள உலகத்தில் தள்ளி, தேவர்களையும், லட்சுமியையும் விடுதலை செய்தார் திருமால். இதனால், லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இவ்விழா தீபாவளிக்கு மூன்றாம் நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.வியாபாரிகள் இந்நாளில் வீட்டில் மனைவி கையால் புதுக் கணக்கு தொடங்க மங்களம் பெருகும். *** அண்டை மாநிலத்தில் தீபாவளி! தீபாவளியை இந்துக்கள் மட்டுமல்லாது ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோரும் கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் கார்த்திகை அன்று விளக்கேற்றி கொண்டாடுவதைப் போல, வடமாநிலத்தவர் தீபாவளிக்கும் விளக்கேற்றிக் கொண் டாடுவர். பொங்கலுக்கு நாம் மாடுகளைக் கழுவுவது போல, அவர்கள் தீபாவளியின் போதும் இப்படி செய்து மகிழ்கின்றனர். சிலர் தீபத்தை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அணையாமலும், நீரில் மூழ்காமலும் இருந்தால் அந்த ஆண்டு நலம் விளையும் என இவர்கள் நம்புகின்றனர். *** கனடாவில் தீபாவளி! கனடா நாட்டு பார்லிமென்ட்டில் முதன் முதலாக 1998ம் ஆண்டு தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், பார்லிமென்ட் கட்டடம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, லட்சுமி பூஜை நடத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒரு வெளிநாட்டு பார்லிமென்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது அதுதான் முதல்முறை. *** கோ - பூஜை! மேற்கு வங்க மாநிலத்தில், தீபாவளிக்கு நான்காம் நாள் கோ-பூஜை செய்கின்றனர். நம் ஊர்களில் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல், தீபாவளிக்கு மாடுகளை அலங்கரித்து வணங்குவர். பசு - சகல தெய்வங்களையும், நதிகளையும் கொண்டது. பசு மகாலட்சுமியின் மறு வடிவம். மேலும், காமதேனுவாக எண்ணி மக்கள் கோ-பூஜை நடத்தி வழிபடுகின்றனர். அன்று, பசுவுக்கு தீப ஆராதனை காட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பு செய்கின்றனர். சுமங்கலிகள் இப்பூஜை மேற்கொள்ள வேண்டும். புது தம்பதிகள் இப்பூஜை செய்ய, குடும்ப வாழ்வு சிறக்கும்; புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். ***
YOGANANDHAN GANESAN
|