Showing posts with label எளிய மருத்துவக் குறிப்புகள். Show all posts
Showing posts with label எளிய மருத்துவக் குறிப்புகள். Show all posts

Sunday, August 5, 2012

மருத்துவ குறிப்புகள் 100/100..






1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக...


10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.



கர்ப்பக் கால கவனிப்பு..!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே...!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.



உணவே மருந்து....!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.



மருந்தே வேண்டாம்....!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.


50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.



லப்... டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.



கிட்னியைக் கவனியுங்கள்....

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.


பல்லுக்கு உறுதி...!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.



ஜெனரல் வார்டு..!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.



நில்... கவனி... செல்...!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.


90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.



எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, April 21, 2012

வெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்!!




வெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்!!
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.

விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

வாதநோய்கள் குணமாகும்!
இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

ஆந்திரர்களின் வெள்ளரிக்காய் பிரியம்!
ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.

வெள்ளரிக்காய் சாறு /ஜுஸ் சாப்பிடுவதுண்டா?
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.

வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலரா- பேதி/வயிற்றோட்டம் குணமாகும்!
பேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.

தோல் பளபளப்பாக…
வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

சிறந்த சத்துணவு இது?
தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.

இரத்த அழுத்தம் குறையும்!
இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.


பருக்கள் மறைந்துவிடும்!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

உடல் எடை குறையும்!
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

முடி நன்கு வளர எளிய வழி
முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். குளிர் சாதனப்பெட்டியில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, April 20, 2011

எளிய மருத்துவக் குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.


மூலம்: தமிழ் சித்தமருத்துவக் கழகம்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net