Sunday, January 2, 2011

காரணம் என்ன?

ஒரு சந்நியாசி காலை நேரத்தில் மலை உச்சி மீது நின்று கொண்டிருந்தார்,தன்னந்தனியாக,அசையாமல்.காலை உலா வந்த மூன்று பேர் அவரைப் பார்த்தார்கள்.ஒருவர் சொன்னார்,''காணாமல் போன பசுவை அவர் தேடிக் கொண்டிருக்கிறார் ,''அடுத்தவர் சொன்னார்,'இல்லை,அவர் நிற்கிற விதத்தைப் பார்த்தால் அவர் எதையும் தேடுவதாகத் தெரியவில்லை.அவர் தன் நண்பர்களின் வரவுக்காகக் காத்திருக்கிறார்,'மூன்றாமவர் சொன்னார்,''நண்பர்களுக்காகக் காத்திருந்தால் அவர் சுற்றிலும் திரும்பிப் பார்க்க வேண்டும்.அவர் அசையவே இல்லை.அவர் தியானம் செய்கிறார்.''
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,அவரிடமே விவரம் கேட்க,சிரமப்பட்டு மலை உச்சிக்குச் சென்றனர்.
முதலாமவர் கேட்டார்,''காணாமல் போன உங்கள் பசுவைத் தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?''
சந்நியாசி கண்களைத் திறந்தார்.''எனக்கு சொந்தம் என்று எதுவும் இல்லை.அதனால் எதுவும் காணாமல் போகவில்லை.எதையும் நான் தேடவும் இல்லை.''
'அப்படியானால், நண்பர்களுக்காகத் தானே காத்திருக்கிறீர்கள்?'என்று இரண்டாமவர் கேட்டார்.
''நான் தனியன்.எனக்கு நண்பர்களும் இல்லை.பகைவர்களும் இல்லை.அப்படியிருக்க நான் யாருக்காகக் காத்திருக்க வேண்டும்?''என்றார் சந்நியாசி.
''அப்படியானால், நான் நினைத்தது தான் சரி.நீங்கள் தியானம் தானே செய்கிறீர்கள்?''என்று கேட்டார் மூன்றாமவர்.
சந்நியாசி சிரித்தார்.''நீங்கள் மடத்தனமாகப் பேசுகிறீர்கள்.எனக்கு சாதிக்க வேண்டியது எதுவுமில்லை.எதற்காக நான் தியானம் செய்ய வேண்டும்?''என்று கேட்டார்.
அப்புறம் மூவரும்,''பிறகு நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டனர்.
''நான் எதையுமே செய்யவில்லை.நான் சும்மா நின்று கொண்டிருக்கிறேன்.''என்று சொல்லி சிரித்தார் சந்நியாசி.
தியானம் என்பது அது தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment