Sunday, January 2, 2011

மூன்று பொன் மொழிகள்

அழகிய பறவை ஒன்றை விலைக்கு வாங்கி அதைக் கூண்டில் வைத்து ஒரு வியாபாரி வளர்த்தான்.ஒரு நாள் அப்பறவை அவனிடம்,தன்னை விடுதலை செய்தால், வாழ்வை வளமாக்கும் மூன்று பொன்மொழிகள் சொல்வதாக கூறியதன் பேரில் வியாபாரி அதை விடுவிக்க ஒப்புக் கொண்டான்.வியாபாரியின் கையிலிருந்து ஒரு பொன்மொழியையும் அவன் வீட்டுக் கூரையில் அமர்ந்து இரண்டாவது பொன்மொழியையும் தோட்டத்தில் உள்ள மரக் கிளையில் அமர்ந்து மூன்றாவது பொன்மொழியையும் கூறுவதாகப் பறவை கூறியது.
வியாபாரி அதன் படி கிளியை விடுவித்து தன கையில் வைத்துக் கொண்டான்.பறவை''உன் வாழ்வில் எதையாவது இழக்க நேர்ந்தால்,அது உன் உயிருக்கு சமமானதாக இருந்தாலும் அதைப் பற்றி வருந்தாதே.''என்றது.
திருப்தியுற்ற வியாபாரி பறவையைக் கையிலிருந்து விட அது கூரையில் அமர்ந்து சொன்னது,''ஆதாரமில்லாத எந்த ஒன்றையும்,உன்னுடைய கண்களைக் கொண்டு நீயே பார்க்காத வரை நம்பி விடாதே.''
அடுத்து வியாபாரி பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உயர்ந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கூறியது,''முட்டாள் வியாபாரியே,என் வயிற்றில் இரண்டு விலை உயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.என்னைக் கொன்று என் வயிற்றிலிருந்து அவற்றை எடுத்திருக்கலாம்.''
இதைக் கேட்டவுடன் வியாபாரி ஆத்திரம் கொண்டான்.வருந்தினான்.ஆனாலும் பிடிக்க முடியாதே என்ற கவலையுடன் மூன்றாவது பொன் மொழியையாவது கூறும்படி பறவையிடம் சொன்னான்.பறவை நகைத்துக் கொண்டே,''என்னப்பா,நான் சொன்ன முதல் முதல் இரண்டு பொன் மொழிகளே உனக்கு புரியாத போது,மூன்றாவது எதற்கு?''என்று கேட்டது.'என்ன சொன்னாய்?எனக்கா புரியவில்லை?'என்று கோபமுடன் கேட்டான் வியாபாரி.
''ஆமாம்,இழந்து போனதற்காக வருந்தாதே என்றேன்.நீயோ இரண்டு ரத்தினக் கற்களுக்காக எரிச்சல் படுகிறாய்.கண்ணால் காணாததை நம்பாதே என்றேன்,நீயோ என் வயிற்றில் இரண்டு ரத்தினங்கள் இருப்பதாகக் கூறியதை நம்பினாய்.முட்டாளே!என் வயிற்றில் இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தால் என்னால் உயிரோடு இருக்க முடியுமா?''என்று கூறிப் பறந்து சென்றது அப்பறவை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment