டாக்டர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம் சந்தித்துத் தெரிந்துகொண்ட விவரங்களை அடிப்படையாக வைத்தே உணவு, டயட் பற்றிய விவரங்களைத் தந்துள்ளேன்.
*
எந்த நோயாளியாக இருந்தாலும் முதலில் தனது உடலின் நோயின் தன்மையைப் பற்றித் தெரிந்துகொள்வது மிக முக்கியம். டாக்டர் சொன்ன உணவுக் கட்டுப்பாட்டைச் சரிவர செயல்படுத்தாவிடில் நஷ்டமடைவது நோயாளிதான் எனத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
*
அதே நேரம் ஒவ்வொரு நோயாளியின் உடல் நிலையும் வித்தியாசப்படும். ஒருவருக்கு கொடுத்த ‘டயட்’ மற்றவருக்கு சரிவராது எனப் புரிவதும் அவசியம். டாக்டரின் பரிந்துரையின் பேரில், தினப்படி உணவில் கலோரிகள் கணக்கிடப்பட வேண்டும்.
*
எந்த அளவு புரதம், சோடியம், பொட்டாசியம், தண்ணீர் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ‘டயட்டீஷியன்’ கூறியபடி எந்தக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும், எதை மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பின்பற்றுவதும் தங்கள் பழுதடைந்த சிறுநீரகம் மேலும் விரைவாகப் பழுதடையாமல் காப்பாற்ற உதவும் என்று புரிந்துகொள்ளுங்கள்.
*
நோயாளி மட்டுமின்றி அவருக்காக உணவு சமைப்பவருக்கும் இதைப் பற்றி முழுவதும் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எந்த அளவு பருப்பு, பயறு, தானியம், காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தெரிந்து கொள்ளவும். (ஒரு நாள் முழுவதற்கும்) அதற்குத் தகுந்தபடி உணவில் மாற்றங்கள் செய்யவும்.
***
சிறுநீரகம் பழுதடைந்த நேயாளிக்கான உணவுகள்:
1. முதலில் உப்பை குறைக்கச் சொல்வர். அதனால் ஊறுகாய், காரம் அதிகமுள்ள துவையல் தவிர்க்கப்பட வேண்டும்.
*
2. கலோரிகள் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால் பொரித்த பண்டங்கள், அதிக நெய், சர்க்கரை சேர்க்கும் இனிப்புகள், கேக், பிஸ்கட், ஜாம், ஜெல்லி எல்லாவற்றையும் தவிர்க்கவேண்டும்.
*
3. கோகோ, சாக்லேட் எடுத்துக்கொள்ளக் கூடாது.
*
4. டின்னில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தக்காளி சாஸ், கெட்ச்_அப் முதல் ஸ்குவாஷ், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜூஸ், இளநீர் எல்லாவற்றிலும் சோடியம், பொட்டாசியம் அதிகம் இருக்குமென்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.
*
5. காய்கறிகளில் டாக்டர் குறிப்பிட்ட காய்கள் மட்டும் (நோயாளியின் உடல் நிலைக்கேற்ப) எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.
*
6. பச்சைக் காற்கறிகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் வேக வைத்து தண்ணீரை வடித்து காய்கறிகளை உண்பது அவசியம். (வேக வைத்து தண்ணீரை வடித்துவிட்டால் பொட்டாசியம் தண்ணீரில் கரைந்து வந்துவிடும். வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இந்தத் தண்ணீரை சமையலில் சேர்த்துக் கொள்ளவும். வீணாக்க வேண்டாம்.)
*
7. சிறுநீரகம் செயலிழப்புக்கு ஆளாகியிருக்கும் நோயாளிகள் மது, மாமிசம், சிகரெட் மூன்றையும் தொடாமலிருப்பது அவசியம்.
*
8. டாக்டரை உங்கள் தோழனாக நினைக்கவும். (அவருக்கென்ன, இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக்கூடாது என்று சுலபமாகக் கூறிவிடுவார். யாரால் அப்படியிருக்க முடியும்? _ இது எல்லா நோயாளிகளின் வாயிலிருந்தும் வரும் வார்த்தைகள்) நம் நல்லதிற்குத்தான் அவர்கள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும்.
***
இனி தங்களுக்காக ஒரு சில செய்முறைக் குறிப்புகள்:
1. வெந்தயக் கீரை, கேழ்வரகு காரடை:
1. இந்த உணவு ஆவியில் வேக வைப்பது. அதனால் எண்ணெய் எதுவுமே சேர்ப்பதில்லை. சுலபமாக ஜீரணமாகும்.
*
2. ஒர ஆழாக்கு கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் இலேசாக வறுத்துக் கொள்ளவும். (நிறம் மாறாமல்)
*
3. ஒரு சிறு கட்டு வெந்தயக் கீரையை உருவிக் கொள்ளவும். வெள்ளை காராமணிப் பயறு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து குக்கரில் ஒரு விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும். (வெந்த பின் ஆழாக்கு அளவு இருக்கவேண்டும்.)
*
4. வறுத்த மாவுடன், கீரை, வேகவைத்த காராமணி, சிறிது மிளகாய்த் தூள், உப்பு (டாக்டரின் பரிந்துரையின் பேரில் சிறிதளவு சேர்க்கலாம் என்பவர்கள் சேர்த்துக்கொள்ளவும்.) சேர்த்து கலந்து சுடுதண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பதமாகப் பிசையவும்.
*
5. இதை சிறு உருண்டைகளாக (15 உருண்டைகள் வரும்படி) உருட்டி கால் அங்குல கனத்திற்கு அடை போல வாழையிலையில் தட்டவும். இலையோடு அப்படியே ஆவியில் இட்லி போல பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
*
இந்த அளவிற்குச் செய்தால் பதினைந்து அடைகள் கிடைத்தால் ஒரு காரடையில் உள்ள சத்துக்கள்:
கலோரிகள் _ 46
மாவுச்சத்து _ 9.5 கிராம்
புரதச்சத்து _ 1.5 கிராம்,
பொட்டாசியம் _ 10.6 மி.கிராம்
சோடியம் _ 10.2 மி.கிராம்(உப்பு சேர்க்காமல் கணக்கிட்டால்)
***
2. முள்ளங்கி சட்னி:
1. கால் கிலோ சிகப்பு முள்ளங்கியைத் துருவி தனியே வைக்கவும். ஒன்றரை டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையோடு, சிகப்பு மிளகாய் (அவரவர் காரத்திற்குத் தகுந்தபடி) சிறு நெல்லிக்காயளவு ஊற வைத்த புளி, ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து அரைத்து கடைசியாக முள்ளங்கியையும் சேர்த்து அரைத்தெடுக்கவும். தாளிக்க வேண்டாம்.
*
2. இந்த அளவின்படி அரைத்தால் கிட்டத்தட்ட பதினைந்து டேபிள் ஸ்பூன் சட்னி வரும். உப்பு சேர்க்காமல் அரைத்து சிறுநீரக நோயாளிகளுக்கு தனியாக எடுத்துவைத்துவிட்டு மற்றவருக்கு உப்பு சேர்க்கலாம். அல்லது அவர்களுக்குக் குறைவாகச் சேர்க்கலாமென்றால் உப்பு இல்லாமல் எடுத்துவிட்டு பிறகு உப்பு சேர்த்த சட்னியில் இருந்து சிறிதளவு எடுத்து உப்பு சேர்க்காத சட்னியுடன் கலந்து தனியே வைக்கவும்.
*
3. உப்பைச் சேர்க்காமல் கணக்கிடும்போது ஒரு டேபிள் ஸ்பூன் சட்னியில் உள்ள சத்துக்கள்
கலோரிகள் : 15.9
புரதம் : 2.2 கிராம்
மாவுச்சத்து : 0.5 கிராம்
கொழுப்பு : 0.55 கிராம்
சோடியம் : 11.6 மி.கிராம்
பொட்டாசியம் : 11.1 மி.கிராம்
சிறுநீரகம் பழுதுபட்ட நோயாளிகள் மதிய உணவில் சாம்பார் போன்றவை ஓரளவாவது எடுத்துக்கொள்ள வேண்டும். முழுமையாக புரதத்தைத் தவிர்த்தால் உடல் மெலிந்து, நடக்கக் கூட சக்தியில்லாமல் அவதிப்படுவர். தாவரப் புரதங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளையத் தேவைக்கும் மேலே எடுத்துக் கொள்வதுதான் தவிர்க்கப்பட வேண்டும்.
***
இனி தங்களுக்காக ஒரு கலவை சாதம்:
தக்காளி பாத்
1. நூறு கிராம் தக்காளியில் 12.9 மி.கி. சோடியம், 146 மி.கி. பொட்டாசியம் உள்ளது.
*
2. வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு தக்காளி அதிகம் சேர்த்தால் சிறுநீரக நோயாளிகளுக்கு வெங்காயம், பூண்டு, தக்காளி குறைவாகச் சேர்த்து சாதம் செய்யவும்.
*
3. அரை ஆழாக்கு அரிசியை உதிரியாக வேக வைத்து ஆறவிடவும். ஒரு வெங்காயம், இரண்டு தக்காளி, மூன்று பச்சை மிளகாய் அரிந்துகொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். நான்கு பல்லு பூண்டை உரித்து அரியவும்.
*
4. வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். அதோடு அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு விழுதானதும் வேகவைத்த பட்டாணி, பரிந்துரைக்கப்பட்ட உப்பு, ஆறவைத்த சாதம் சேர்த்து நன்கு சூடாகும் வரை கலந்துவிடவும்.
*
5. இதை இரண்டு நபருக்கு பரிமாறினால் ஒரு நபருக்கு கிடைக்கும் சத்துக்கள்:
புரதம் : 5.2 கிராம்
சக்தி : 287 கலோரிகள்
மாவுச்சத்து : 44.1 கிராம்
கொழுப்பு : 7 கிராம்
சோடியம் : 8.1 மி.கி.
பொட்டாசியம் : 223 மி.கி.
இதில் தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு எடுத்து தண்ணீரை வடித்துவிட்டால் ஓரளவு பொட்டாசியம் குறையும். பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து தண்ணீரை வடிக்கும்போதும் ஓரளவு பொட்டாசியம் குறைந்துவிடும்.
***
பூண்டுக் குழம்பு
1. பூண்டில் சோடியம், பொட்டாசியம் இரண்டுமே இல்லை. நல்ல மருத்துவக் குணங்கள் உள்ளதால் தினப்படி உணவில் நோயாளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
*
2. மூன்று முழுப் பூண்டை (மலைப்பூண்டு அல்லது நாட்டுப்பூண்டு) உரித்து பல் பல்லாக எடுத்துக் கொள்ளவும். நூறு கிராம் சிறிய வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். எலுமிச்சையளவு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒன்றரை டீஸ்பூன் மிளகை வறுத்து கரகரப்பாக பொடிக்கவும். உரித்த சிறிய வெங்காயம் ஐந்துடன் ஒரு தக்காளியைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
*
3. வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவை சேர்த்துத் தாளித்து பூண்டு, சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக பொன்னிறமானதும், அரைத்த விழுது, மிளகுத்தூள், சிறிது தனியாத்தூள் சேர்க்கவும். வாசனை வரும்போது புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சாதத்துடனும் பரிமாறலாம், இட்லியுடனும் பரிமாறலாம்.
*
4. சிறிய கப்பில் எட்டு கப் அளவு குழம்பு கிடைத்தால், ஒரு கப் அளவில் கிடைக்கும் சத்துக்கள்
சக்தி _ 73 கலோரிகள்
மாவுச் சத்து _ 11.3 கிராம்
புரதம் _ 2 கிராம்
கொழுப்பு _ 2.2 கிராம்
சோடியம் _ 0.8 மி. கிராம்
பொட்டாசியம் _ 9.0 மி. கிராம்
5. பொதுவாக மதிய உணவுக்கு பொரியல் வகைகளைச் செய்யும்போது, சௌ_சௌ, புடலங்காய், பீர்க்கங்காய், பட்டாணி, மாங்காய், நூல்_கோல், அகல அவரை, முள்ளங்கி, பீட்ரூட், வெந்தயக் கீரை போன்றவைகளில் பொட்டாசியம் ஓரளவு குறைவாக உள்ளதால் (100 கிராம் காய்கறிகளில் 100 மி.கிராம் அதற்குக் குறைவாகவும்) இந்தக் காய்கறிகளில் பொரியல் செய்யலாம். வேகவைத்த தண்ணீரை வடித்துவிட்டு பொரியல் செய்யவும்.
*
6. அரிசியில் சோடியம், பொட்டாசியம் இரண்டுமே இல்லாததால், தினமும் குறிப்பிட்ட அளவு உண்ணலாம். (புழுங்கலரிசி மற்றும் பச்சரிசி இரண்டிலும்) கீரை வகைகளில் புதினா, கறிவேப்பிலை, முட்டைகோஸ், பொன்னாங்கண்ணி, முள்ளங்கி இலை, புளியம் இலை இவைகளில் சோடியம், பொட்டாசியம் இரண்டுமே அறவே இல்லாததால் இவற்றை உபயோகித்து விதவிதமான சாத வகைகள், ருசியான பொடி வகைகள் செய்யலாம்.
**
உதாரணத்திற்கு:
கறிவேப்பிலைப் பொடி:
1. கறிவேப்பிலையை உருவி நன்றாகக் கழுவி வடித்து ஒரு துணியின் மீது பரப்பி நிழலில் நன்கு காய விடவும்.
*
2. இலையில் ஈரமில்லாமல் நன்கு உலர்ந்தபின் ஒரு அடி கனமான வாணலியில் சிறிதுசிறிதாக வறுக்கவும். நன்கு கரகரப்பானதும் எடுத்து தட்டில் கொட்டவும். எல்லா இலையையும் வறுத்து, மொரமொரப்பானதும் மிக்ஸியில் பொடி செய்யவும்.
*
3. இந்தப் பொடி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு இருந்தால் கால் ஆழாக்கு கடலைப் பருப்பு, கால் ஆழாக்கு உளுத்தம் பருப்பு, 20 சிகப்பு மிளகாய், பூண்டு உரித்தது 10 பற்கள், புளி, சிறிய நெல்லிக்காயளவு, ருசிக்கேற்ப உப்பு தேவை.
*
4. மிளகாயை மட்டும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுக்கவும். வாணலி சூடாக இருக்கும்போது புளியைப் பிய்த்து அதில் சிறிதுநேரம் போட்டு வைத்தால் ஈரமில்லாமல் இருக்கும்.
*
5. முதலில் மிளகாய், வறுத்த பருப்பு வகைகள், உப்பு போட்டு மிக்ஸியை ஒரு தடவை லேசாக ஓடவிட்டு அதோடு புளி, கறிவேப்பிலைப் பொடி, பூண்டு சேர்த்து மறுபடி ஒரு தடவை எல்லாம் ஒன்றாக பொடி ஆகும் படி விட்டுவிட்டு மிக்ஸியை ஓடவிடவும்.
*
6. இதேபோல புளியம் இலை (துளிர்) புதினா போன்றவை உபயோகித்தும் செய்யலாம். கடலைப் பருப்பிற்கு பதில் எள் உபயோகிக்கலாம். சிறுநீரக நோயாளிகளுக்காக உப்பைக் குறைத்துச் சேர்த்து தனியே எடுத்துவிட்டு மீதியுடன் தேவையான உப்பை மற்றவர்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
*
7. குறைவான புரதம், தேவைக்கேற்ற மாவுச்சத்து, கொழுப்பு குறைவான, திரவம் பரிந்துரைக்கப்பட்ட, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு தினமும் மாத்திரை வடிவில் வைட்டமின் ‘சி’ டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அவசியமாக மறக்காமல் நோயாளிகள் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
*
8. உணவு முறையில் சரியாகக் குறிப்பிட்டுள்ளபடி டாக்டரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மாற்றங்கள் சிறுநீரகங்கள் சீக்கிரமாக மேலும் பழுதடையாமல் இருக்க உதவிபுரியும்.
*
9. பொதுவாக சிறுநீரகம் பழுதுபட்ட நோயாளிகள், விலங்குகளிலிருந்து பெறப்படும் முதல்தர புரதமான மாமிசம், முட்டை, பால் அதிலிருந்து பெறப்படும் பொருட்களில் உள்ளது அவை குறைக்கப்பட வேண்டியது அவசியம். தாவரப் புரதமான பருப்பு, பயறு வகைகள், தானியங்கள், கீரை, காய்கறிகள் இவற்றிலிருந்து பெறப்படும் இரண்டாம் தர புரதம் எடுத்துக் கொள்ளலாம்.
***
மேலும் சில:
1. பொதுவாகவே நோய் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் சரியான உணவு முறை, மருந்து இவற்றால் மேலும் நோய் முற்றாமல் பல வருடங்கள் உடலைப் பாதுகாக்க இயலும்.
*
2. கடந்த இதழில் நான் எழுதிய அட்டவணைகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டு என்னென்ன காய்கறிகள் ஒரு நாளுக்குச் சேர்க்கலாம் எனத் தெரிந்து கொள்ளவும். எவ்வளவு தானியம், பருப்பு, எண்ணெய் சேர்க்கலாமென டாக்டர் மற்றும் டயட்டீஷியன் பரிந்துரையின்படி உணவு அட்டவணை தயாரிக்கவும்.
*
3. நமது தென்னிந்திய சமையலில் இட்லி, தோசை வகைகளிலேயே நூற்றுக்கணக்கில் உள்ளது. மதிய உணவுகளில் குழம்பு, பொரியல், ரசம் போன்றவைகளிலும் நூற்றுக்கணக்கான செய்முறைக் குறிப்புகள் உள்ளது.
*
4. தெரியாதவர்களுக்காக இவற்றை புத்தக வடிவில் எங்களைப் போன்றவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். அதை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு சரியான உணவை, சரியான அளவில் தேர்ந்தெடுத்து உண்டால் எந்தவிதமான உடல் உபாதைகளும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் சுலபமாக சமாளித்து சந்தோஷமாக வாழலாம்.
***
நன்றி குமுதம் ஹெல்த்
***
***
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment