Monday, April 25, 2011

உணவகம் செல்லும் போது கவனிக்க வேண்டிய 10 விடயங்கள்

உறவுகளின் நெருக்கம் அதிகரிக்க அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணும் வாய்ப்பு நகர்ப்புற வாசிகளுக்கு வாய்ப்பதில்லை. அவசரகதியில் இயங்கும் வாழ்க்கை விடியலில் புறப்பட்டு, நள்ளிரவுக்கு சில மணி நேரம் மட்டுமே இருக்கும் போது வீடு வந்து சேரும் மனிதர்களையே தயாரித்திருக்கிறது.



விலைவாசியின் உயர்வும், தாரளமயமாக்கலால் அதிகரித்திருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் இன்றைக்கு மனிதனின் உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்தியிருப்பதுடன், கணவன் மனைவி இருவரும் உழைத்தால் மட்டுமே ‘சமாளிக்க’ முடியும் எனுமளவுக்கு சூழலை இறுக்கப்படுத்தியும் இருக்கிறது.

*

குடும்பத்தினருடன் செலவிடக் கிடைக்கும் ஒரு சில மணி நேரங்களைக் கூட ஊடகங்களின் மலினமான நிகழ்ச்சிகள் வலுக்கட்டாயமாய் பிடுங்கிக் கொள்வதால் குடும்பத்தினருடனான அன்னியோன்னியம் அகன்று கொண்டே வருகிறது.

*

இந்த வெற்றிடத்தை சிறிதளவேனும் நிரப்ப வேண்டும் எனும் ஆவலில் வார இறுதிகளிலோ, மாதம் ஒருமுறையோ ஏதேனும் ஒரு உணவகத்தில் சென்று உணவருந்தும் பழக்கம் இன்று நகர்ப்புற வாசிகளிடையே வெகுவாகப் பரவி வருகிறது.

*

வீடுகளில் பார்த்துப் பார்த்து சமைத்து, ஆரோக்கியமானதை மட்டுமே உண்டு வரும் பலரும் உணவகங்களுக்குச் சென்றால் ஒரு பிடி பிடித்து உபாதைகளை உபரியாகப் பெற்று வந்து விடுகின்றனர்.

*

உணவகங்களுக்குச் செல்லும் போது கீழ்க்கண்ட பத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டால், உறவு பலப்படுவதுடன் ஆரோக்கியமும் சிதையாமல் காத்துக் கொள்ள முடியும்.

*

1. பரபரப்பான உணவகம் எனில் முன் கூட்டியே முன் பதிவு செய்து கொள்ளுங்கள். நேரம், நபர்களின் எண்ணிக்கையை தெளிவாய் சொல்லுங்கள். முன்பதிவு செய்யும்போதே ஏதேனும் கூப்பன் உள்ளதா போன்ற செய்திகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்துவிட்டால் தாமதம் ஏற்படுத்தாமல் குறித்த நேரத்தில் கண்டிப்பாக செல்லுங்கள். ஒருவேளை முன்பதிவு இல்லாமல் இருந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஒரு மெனு அட்டையை வாங்கி என்ன உண்ணலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

*

2. உணவுக்கு முன் சூப், ஸ்டார்டர் சாப்பிடும் போது அதிக அடர்த்தியான சூப் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அடர்த்தியான சூப் பொதுவாக அதிக கொழுப்பு உடையதாக இருக்கும். ஸ்டார்டர் உண்ணும் போது பொரித்த வகையறாக்களை விடுத்து அவித்த பொருட்களைத் தேர்வு செய்து உண்ண வேண்டும். உதாரணமாக நன்றாக பொரித்த கோழியை விட தந்தூரி வகையறாக்கள் நல்லது.

*

3. ஏதேனும் ஒரு சாலட் தருவியுங்கள். அதிக கிரீம்கள் பூசப்படாத, ஒரு சாலட் உண்பது பின்பு உண்ணப்போகும் உணவின் அளவை ஆரோக்கியமாகக் கட்டுப்படுத்தும்.

*

4. பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை அறவே தவிருங்கள். அவை உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை செய்வதில்லை. தண்ணீர் தவிர்த்து ஏதேனும் பானம் அருந்த வேண்டுமென்று விரும்பினால் எலுமிச்சை சாறு குடிக்கலாம், அல்லது ஒரு தேனீர் அருந்தலாம்.

*

5. உணவு குறித்தோ, அதன் தயாரிப்புப் பொருட்கள், தயாரிக்கும் விதம் குறித்தோ ஏதேனும் தெரியவேண்டுமெனில் தயங்காமல் கேளுங்கள். முழு திருப்தி தராத உணவுகளை உட்கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை உண்டெனில் அதற்குத் தக்க உணவுகளை கவனமாய் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

*

6. அசைவப் பிரியர்கள் லிவர், சிறுநீரகம் போன்றவற்றை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். தோலில் அதிக கொழுப்பு இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். வறுத்த ‘கொழுப்பு’ போன்றவற்றின் பக்கம் சாயவே சாயாதீர்கள். முட்டை உண்ணும்போது அவித்த முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்ண முடிந்தால் அற்புதம்!உங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகள் அதிகக் கொழுப்புள்ளவையாக இருந்தால் அதை முழுமையாய் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. உண்ணும் அளவையேனும் குறைத்துக் கொள்ளுங்கள்.

*

7. பீட்ஸா சாப்பிடக் கிளம்புகிறீர்கள் எனில் ‘மெல்லிய’ (திந்cருச்ட்) பீட்சாவை தேர்ந்தெடுங்கள். கூடவே அசைவப் பீட்சாவையும், அதிக சீஸ் (பாலாடை) உள்ள பீட்சாவையும் தவிர்க்க வேண்டுமென்று முடிவெடுங்கள். வாங்கிய எல்லாவற்றையும் தின்று முடிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. போதும் எனுமளவுக்கு உண்ணுங்கள், மிச்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

*

8. உண்டு முடித்தபின் ஐஸ்கிரீமை ஒரு கட்டு கட்டுவது எல்லாவற்றுக்கும் பிரச்சனையாய் முடியும். எனவே கடையில் உண்ண பழங்களையே தேர்ந்தெடுங்கள். ஐஸ்கிரீமை தவிர்க்கவே முடியாது என உங்கள் மனம் உங்களை நச்சரித்தால் பழங்களுடன் கலந்து சிறிதளவு உண்ணுங்கள்

*

9. உங்களுக்கு உணவு பரிமாறுபவர் மீது உங்கள் எரிச்சல்களைக் காட்டாதீர்கள். அன்புடன் பேசுங்கள். நன்றாக உங்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கு தயங்காமல் நிறைய டிப்ஸ் கொடுங்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் 15 முதல் 25 விழுக்காடு வரை டிப்ஸ் வைப்பது மேஜை நாகரீகமாகக் கருதப்படுகிறது.

*

10. அவசரப்பட்டு உண்ணாதீர்கள். கைப்பேசிகளை அணைத்து வையுங்கள். மெதுவாக, சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே உண்ணுங்கள். நன்றாக மெல்லவேண்டும் என்பதை நினைத்துக் கொண்டே உண்ணத் துவங்குங்கள். உணவு அருந்த அதிக நேரம் செலவிடுவது உங்கள் ஆரோக்கியம் பலப்படவும், உறவு பலப்படவும் பேருதவியாய் இருக்கும்.


*

அடிக்கடி அனைவரும் கூடி ஒன்றாய் நேரத்தைச் செலவிடும் நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உலகில் உறவுகள் தரும் மன நிறைவையும் அர்த்தத்தையும் வேறேதும் தந்துவிடாது என்பதை மனதில் ஆழப் பதியுங்கள்


***
thanks xavi

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment