Wednesday, March 16, 2011

உசர்ட்டாசனம் & சுப்தவஜிராசனம் & விபரீத கரணி & மத்ச்யாசனம் (மச்சாசனம்)

உசர்ட்டாசனம்


உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப் பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.



***



பலன்கள்:

*

முதுகெலும்பு பலப்படும். மார்பு விரியும். சுவாசக் கருவிகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா நீங்கும். மூச்சுத் திணறல், பலகீனம் ஒழியும்.

***


போலீஸ், மலிட்டரிக்கு வேலைக்குப் போகிறவர்கள் மார்பு அகலம் வேண்டும் என்றால் 15 நாள் இப்பயிற்சியைச் செய்தால் 2 முதல் 3 அங்குலம் மார்பு விரியும். ஆஸ்துமாவுக்கு மிக முக்கியமான ஆசனம். தரையில் கையை வைத்தே முதலில் பழக வேண்டும். பின் 15 நாள், ஒரு மாதம் சென்றபின் கால்களில் கைகளை வைத்து செய்யலாம்.



*********

சுப்தவஜிராசனம்

முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமர வேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும்.
***
பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைத்து படுக்க வைக்க வேண்டும். அடுத்து ஆசன நிலையில் இருக்கும் போது ஒரே நிலையில் மெதுவாகச் சுவாசம் செய்ய வேண்டும். சுவாசத்தை மெதுவாக வெளியிட்டவாறு ஆசனத்தைக் கலைக்க வேண்டும்.
***
பலன்கள்:
*
ஜனனேந்திரிய பாகங்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளக்கிறது. தசை நாளங்கள், நரம்புக் கோளங்கள் முதலியவற்றை நன்கு இயங்கச் செய்கிறது. கர்ப்பாசய உறுப்பு நன்கு அழுத்தப்படுவதால் வலுப்பெறும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். கருத்தரித்த மாதத்திற்குப் பின்னும் மாதவிடாய் ஆன காலத்திலும் இந்த ஆசனம் செய்தல் கூடாது. மச்சாசனம் செய்ய முடியாதவர்கள் இவ்வாசனம் செய்யலாம்.
************
விபரீத கரணி


விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இளக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் முதுகையும் உயரக் கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும்.ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஓரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட பாகத்தைத் தூக்கி நிறுத்திச் செய்யலாம்.
***
காலை விறைப்பாக வைக்காமல் சாதாரணமாக வைக்கவும்.ஒரு முறைக்கு 2 நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம். சாதாரண மூச்சு.கீழே இறங்கும் போது காலை மடக்கிக் கைகளால் பிருஷ்ட பாகத்தை வழுக்கி இறக்க வேண்டும்.
***
பலன்கள்:
*
சர்வாங்காசனத்தின் 80 சதவீதப் பலன்கள் இந்த ஆசனத்திற்குக் கிடைக்கும்.
***
குறிப்பு:
*
நேரம் கிடைக்காதபோது 2 நிமிடம் இவ்வாசனத்தை மட்டும் செய்தால் நல்ல உடல் நலம் சுறுசுறுப்புக் கிடைக்கும்.

********
மத்ச்யாசனம் (மச்சாசனம்)

பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் கைகளை எடுத்து, கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும். தீர்க்கமாய் சுவாசிக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.
***
பலன்கள்:
*
சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம், சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும். முதுகெலும்பு பலப்படும். மார்பு விரிந்து நுரையீரல் நன்றாக வேலை செய்யும். மலச்சிக்கல் நீங்கும். மார்புக்கூடு, ஷயம், காசம், இருமல், கக்குவான், மார்புச்சளி நீங்கும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment