Friday, April 1, 2011

இவை உடலுக்கு குளிரவைக்கும் பானங்களா?

பெப்சி, கோகோகோலா உள்ளிட்ட சில குளிர்பானங்களில் அதிக அளவில் நச்சுப்படிவங்கள் உள்ளதாக தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுசூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பெப்சி உள்ளிட்ட 12 குளிர்பான நிறுவனத் தயாரிப்புகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மக்களவையில் பல உறுப்பினர்கள் வாதிட்டார்கள்.

*

இதையடுத்து பெப்சி, கோககோலா பானங்களின் விற்பனை நாடாளுமன்ற வளாக உணவகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அண்ணபல்கலைக்கழகமும் இந்த முடிவை எடுத்துள்ளது.

*

தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும் இந்தக் குளிர்பானங்கள் மீதான முழுமையான தடையை விதிக்க பரிசீலித்து வருகின்றன.

*


பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.

*

ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

*

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.

*


செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன.

*

பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.

*


இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை.

*

எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.

*


மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

*

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.

*


சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார்.

*

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

*


இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன.

*

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

*

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*


வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

*


காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.

*


மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

*

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

*


சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.

*


சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

*

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.

*


இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

*


மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.

***
by-மதுசூதனன்
நன்றி:ஆறாம்திணை
http://www.yarl.com/forum/index.php?showtopic=658
***


"வாழ்க வளமுடன்"

***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment