தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. ""என்ன பிரச்னை? எதற்கு கவலை?'' என்றார் குரு. ""எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.'' அவன் சொன்னதிலிருந்தே இளைஞனுடைய பிரச்னை என்னவென்று குருவுக்குத் தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ஒரு ஊருக்கு வெளில மரத்தடில பெரியவங்கலாம் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ அங்க புதுசா ஒருத்தன் வந்தான். ""நான் பக்கத்து ஊர்லருந்து வர்றேன். இந்த ஊர்ல எதாவது வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன். இந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி? நல்லபடியா பழகுவாங்களா?'' என்று கேட்டான். அதற்கு ஒரு பெரியவர், ""நீ இருந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி? என்று எதிர் கேள்வி கேட்டார். ""ஐயோ, அத ஏன் கேக்குறீங்க. ஒருத்தன் கூட சரியில்ல, எல்லாம் பொறாமை பிடிச்சவங்க. அதான் இங்க வரேன்'' என்றான் வந்தவன். ""அப்படியா? இந்த ஊர் ஜனங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். பெரிய வித்தியாசமில்லை'' என்று பதிலளித்தார் பெரியவர். வந்தவன் வேறு வழியாக போய்விட்டான். சிறிது நேரம் அதே வழியாக இன்னொருவன் வந்தான். அவனும் அந்த ஊரைப் பற்றி விசாரித்தான். இவனிடமும் அவனுடைய பழைய ஊரைப் பற்றி விசாரித்தார் பெரியவர். ""அந்த ஊர் ரொம்ப நல்ல ஊர், ஜனங்கலாம் ரொம்ப நல்ல மாதிரி, இனிமையா பழகுவாங்க. அந்த ஊர்ல வியாபாரம் செஞ்ச மாதிரி இங்கேயும் வியாபாரம் செய்யலாம்னு நினைக்கிறேன்''என்று சொன்னான் வந்தவன். உடனே பெரியவர், ""இந்த ஊரும் அப்படித்தான். ஜனங்கலாம் நல்லவங்க. உனக்கேத்த ஊரு''என்று சொல்லி ஊருக்குள் அனுப்பி வைத்தார். அப்போது அருகிலிருந்த இன்னொரு பெரியவர், ""என்ன அவனுக்கு அப்படிச் சொன்ன, இவனுக்குச் இப்படிச் சொல்ற?'' என்று கேள்வி எழுப்பினார். ""ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரே ஊரைப் பத்திதான் கேட்டேன். முதல்ல வந்தவன் எல்லாத்தையும் எதிர்மறையா பாக்கிறவன். அவனால எந்த ஊர்லயும் குப்பை கொட்ட முடியாது. இரண்டாவது வந்தவன் எல்லாத்தையும் நல்லவிதமாக பாக்கிறவன், அதனால அவனால எங்கேயும் சாதிக்க முடியும்'' என்றார் பெரியவர். குரு சொன்ன கதையைக் கேட்டதும் இளைஞனுக்கு தன்னுடைய குறை புரிந்தது. அன்று குரு அவனுக்குச் சொன்ன Win மொழி: நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ அதேபோல்தான் மற்றவர்கள் உன்னைப் பார்ப்பார்கள்.
YOGANANDHAN GANESAN
|
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
மிகவும் பயனுள்ள ,தன்னம்பிக்கை கதை ... நன்றி பகிர்வுக்கு நண்பா :)
ReplyDelete