அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற ஔவையாரின் கூற்றுப்படி மனிதனாய் பிறப்பதே ஒரு மாபெரும் தவமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உடலை நோயின்றி பாதுகாப்பது நம் கடமையாகும்.
உடலை நோயின்றி பாதுகாக்க சித்தர்கள் கண்ட வழிமுறைதான் காயகற்பம். அதாவது கற்பமென்பது உடம்பினை நோயுறாதபடி நன்னிலையில் வைத்திருந்து நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு நீக்கி பாதுகாப்பது.
இந்த வகையான கற்ப மூலிகைகளில் ஒன்றான கண்டங்கத்திரி பற்றி தெரிந்து கொள்வோம்.
கண்டங்கத்திரி, செடி வகையைச் சார்ந்தது. எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகுதியாக காணப்படுகிறது.
இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.
காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசுசுரஞ் சன்னி விளைதோடம் - ஆகறுங்கால்
இத்தரையு ணிற்கா எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்
(அகத்தியர் குணபாடம்)
பாடல் விளக்கம் - கண்டங்கத்திரி காசம், சுவாசம், அக்கினிமந்தம், தீச்சுரம், சன்னி வாதம், ஏழுவகைத் தோடங்கள், வாத நோய் ஆகியவற்றைத் தீர்க்கும்.
காச சுவாசம் குணமாக
இன்றைய நவீன யுகத்தில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளது. மேலும் உணவுப் பழக்கங்களாலும் மனித உடல் நோய் எதிர்ப்பு சக்தி குன்றி காணப்படுகிறது. இதனால் முதலில் மனிதன் பாதிக்கப்படுவது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால்தான்.
உடலில் ஒவ்வாமை உண்டாகி அது நுரையீரலை அடைந்து இரத்தத்தில் கலந்து மூக்கில் நீரேற்றம், நீர் வடிதல், தலைவலி, சைனஸ் போன்றவற்றை உண்டு பண்ணுகிறது. நாளடைவில் காச சுவாச நோயாக மாறிவிடுகிறது.
கண்டங்கத்திரி சமூலத்தை (இலை, பூ, காய், பழம், விதை, வேர்) நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து அதனுடன் தேன் கலந்து காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் காச சுவாசத்தின் பாதிப்பு குறைந்து நாளடைவில் குணமாகும். அல்லது இதன் பொடியை கஷாயமாக்கி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வரலாம். இதனால் தலைவலி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும். சைனஸ் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட இது சிறந்த மருந்தாகும்.
சளியைப் போக்க
இருமல், ஈளை, சளி, தொண்டைக்கட்டு நீங்கவும், உடலில் உள்ள சளியைக் குறைக்கவும் கண்டங்கத்திரி கஷாயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்திய மருத்துவ முறைகளில் இதன் பயன்பாடு அதிகம். இரத்தத்தில் உள்ள சளியை மாற்றும் தன்மை கொண்டது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இருதயக் குழாய்களில் ஓடும் ரத்தத்தின் ஒட்டும் தன்மையை மாற்றி அடைப்புகளை நீக்கும்.
ஈளை இழுப்பு இருமல் சுவாசகாசம்
மாறும்தானும் கண்டங்கத்திரியாலே..
என்று அகத்தியர் வர்ம காண்டத்தில் கூறியுள்ளார். மேலும் காயகற்பமான வாசாதி லேகியம் என்ற திருமேனி லேகியத்தில் கண்டங்கத்திரி முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. ஆஸ்துமா மற்றும் ரத்த அழுத்தத்தையும், நுரையீரல் சளியையும், சுவாசக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளையும் நீக்கும் தன்மை கண்டங் கத்திரிக்கு உள்ளதால் வாசாதி லேகியத்தில் சேர்க்கப்படுகிறது. இதனால் தான் சித்தர்கள் கண்டங்கத்திரியை காயகற்ப மூலிகை என்று அழைக்கின்றனர்.
பசியைத் தூண்ட
மலச்சிக்கலும், அஜீரணக் கோளாறும் நீங்கினாலே மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். இவை நீங்கினால்தான் உடல் புத்துணர்வு பெறும்.
நன்கு பசியெடுக்க குடலில் செரிமான சக்தி அதிகமாக இருக்க வேண்டும். கண்டங்கத்திரி, செரிமான சக்தியைத் தூண்டும் தன்மை கொண்டது. கண்டங்கத்திரியின் பழத்தை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால் நல்ல செரிமான சக்தி கிடைக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
பல் வலி நீங்க
பல் வலி, பல் ஈறுகளில் வீக்கம், பூச்சிப்பல், இவற்றால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்க கண்டங்கத்திரி வேரை நிழலில் உலர்த்தி அதனுடன் காயவைத்த புதினா இலைகளைச் சேர்த்து நன்கு பொடியாக்கி அதைக்கொண்டு தினமும் பல் துலக்கினால், அல்லது பல் துலக்கிய பின் இந்த பொடியை பற்களிலும் ,ஈறுகளிலும் நன்கு தேய்த்து வந்தால் பல்வலி, பல் ஈறு நோய்கள் நீங்கும்.
கண்டங்கத்திரி சமூலத்தை பொடித்து வைத்து அதை கஷாயமாக்கி அருந்தி வந்தால் கழுத்து வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் மூட்டுகளில் உள்ள வலிகளைப் போக்கி , அதன் இறுக்கத் தன்மையைக் குறைக்கும்.
வியர்வை நாற்றம் நீங்க
கண்டங்கத்திரி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து நன்றாக கொதித்த பின் வடிகட்டி ஆறவைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உடலெங்கும் பூசி வந்தால், வெயில் காலங்களில் உண்டாகும் வியர்வை நாற்றம் நீங்கும்.
வெண்புள்ளிகள் மறைய
கண்டங்கத்திரியின் பழத்தை குழைய வேக வைத்து நன்றாக கடைந்து வடிகட்டி எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி உடலில் உள்ள வெண்மை நிறப் புள்ளிகள் மீது தடவி வந்தால், வெண்புள்ளிகள் மறையும். இது சித்த மருத்துவத்தில் வெண்குஷ்ட நோய்க்கு மருந்தாகச் சேர்க்கப்படுகிறது.
கண்டங்கத்திரி வேரை காயவைத்து பொடித்து, கஷாயம் செய்து அதில் திப்பிலி பொடியும், தேனும் கலந்து அருந்திவந்தால் நீரின் மூலமாக உண்டாகும் தொற்று நோய்கள் விரைவில் குணமாகும்.
கண்டங்கத்திரியை முள் செடி என்று ஓரங்கட்டி விடாமல், அதன் பயனறிந்து தேவைக்கு உபயோகித்து சிறந்த பலனை அடைந்து ஆரோக்கியம் பெறலாம்.
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment