Thursday, November 25, 2010

மரம் - ஆலமரம்

ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி என திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இன்றும் கூட நம் கிராமங்களில் காணலாம்.

ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது.  மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது.    அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர்.

நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம்.  மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன.  இன்றும் கிராமங்களில் சாலைகளிலும், குளக்கரைகளிலும்,  பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிழல் தரும் மரமாகத் திகழ்கிறது.  பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆலமரம், புங்கமரம் இவற்றை நட்டு வளர்த்தனர்.  அதன் பயனை பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம்.  ஆலமர நிழல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  அரசமர நிழல் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகிறரோ அதேபோல் ஆலமர நிழலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும்  எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.

இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.  இதன் இலை, பழம், பூ, விழுது, பால்  அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
பூத மதிபதியைப் போல்

- தேரையன் வெண்பா பொருள் - நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.


சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்
- அகத்தியர் குணபாடம்

உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும்.

ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.


வெள்ளை படுதல் குணமாக

வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.  மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள்.  இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும்.


நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.


எலும்பு முறிவுக்கு

எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு,  போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும்.  எலும்புகள் பலமாகும்.


வாய்ப்புண் நீங்க

ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும்.  இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.


பல் பாதுகாப்பு
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி

என்பது நம் முன்னோர்களின் பழமொழி.  ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும்.  ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும்.  பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

1 comment:

  1. பொதுவாக சினிமா, நகைச்சுவை என எல்லோரும் பதிவு இடுகையில், இப்படி ஒரு நல்ல பதிவை இட்டமைக்கு நன்றி யோகா. இதுபோல் மேலும் பல நல்ல பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். நன்றி! (nanbendaa.blogspot.com, madrasbhavan.blogspot.com)

    ReplyDelete