Monday, November 29, 2010

இரவில் தனிமையில் இருந்தால் திக்...திக்...

இருட்டிற்குள் கொஞ்ச தூரம் செல்லவும் திக்...திக்... காரணம் உள்ளூர ஊறிவிட்ட பயம் தான். பேய் என்றொரு விசித்திரம். இருக்கிறதா, இல்லையா? என்று விடை தெரியாததால் ஒட்டிக் கொண்ட பயம் அது.

உருவம் உண்டு, உருவம் கிடையாது. இருட்டுக்குள் இருக்கும், மரத்தில் ஆடும். மனிதனைப் போல உருவமிருக்கும். அதன் வழியில் குறுக்கிட்டால் ஒரே அடியில் உயிரைக் குடித்துவிடும். இப்படி ஆளாளுக்கு சொல்லி வைக்க, தொற்றிக் கொண்ட பயம்தான் பேய் பயம்.

***

பட்டிக்காட்டான், பகுத்தறிவாளன், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் பேய் பற்றிய சிந்தனையில் வேறுபடுகிறார்கள். பேய் பற்றிய குறிப்புகள் ஆன்மிக நூல்களிலும் காணப்படுகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேய் பற்றி பேசப்பட்டு வருகிறது.

மனோதத்துவ விஞ்ஞானிகள் (1890-ல்) சொசைட்டி பார் சைஜிக்கல் ரிசர்ச் (எஸ்.பி.ஆர்.) என்ற அமைப்பை தொடங்கி ஆவிகளைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்து நேரடி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவி ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன.

***

ஆவி உலக ஆராய்ச்சியின் முன்னோடியாக கருதப்படும் ஜி.என்.எம்.டைரல் என்பவர் 4 வகை பேய்கள் உண்டு என்கிறார். 1.உயிரோடு இருப்பவர்களின் ஆவி. ஒருவர் உயிரோடு இருக்கும்போதே அவருடைய ஆவி வேறு எங்கோ வசிக்கும் ஒருவர் முன் தோன்றுவது. 2. ஆபத்து நேர ஆவிகள். நமக்கு நன்கு தெரிந்தவர், அவருக்கு ஆபத்தான தருணத்தில் (இறப்பு அல்லது விபத்தின்போது) நம் முன் தோன்றுவது. 3. இயல்பான ஆவிகள். இறந்த ஒருவருடைய ஆவி எப்போதாவது தோன்றுவது. 4. நீண்டகால ஆவிகள். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகளில் பல ஆண்டுகளாக வசிப்பவை இந்த வகை ஆவிகள்.

***

ஆவி உலகில் மீடியமாக செயல்படும் பெண்கள் ஏராளம். ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் முக்கியமான பெண் ஆய்வாளர் பாய்ன். ஆவிகளில் நல்லவை, கெட்டவை, சாது, முரடானவை உண்டு என்கிறார் இவர். அவை மனிதர்களை தாக்கும், உதவும், கண்டுகொள்ளாமலும் செல்லும் என்பது இவருடைய கருத்து. பேய் அடித்து யாரும் சாவதில்லை. பேயைப் பார்த்த பயத்தில் செத்தவர்கள்தான் ஏராளம் என்கிறார் பாய்ன். பேயைப் பார்த்து பயப்படாமல், `ச்சீ போய்விடு' என்று அலட்சியப்படுத்தினால் அவை போய்விடும் என்று பேய் விரட்ட டிப்ஸ் தருகிறார் இவர்.

***

வீட்லிகேரிங்டன் ஆவி ஆராய்ச்சியில் புகழ் பெற்றவர். "உடலில் உள்ள செல்கள் போலவே மனதுக்கும் செல்கள் உண்டு. அவை சைகான்கள் எனப்படும். நாம் ஆழமாக ஒரு விஷயத்தை எண்ணும்போது சைகான்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உருவமாகத் தோன்றும். அதுதான் ஆவி'' என்று இவர் விளக்கம் அளித்தார். இது ஒரு புதுமையான விளக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், எல்லோரது எண்ணங்களும் அப்படி உருவத்தை ஏற்படுத்தும் என்பதை மெய்ப்பிக்க முடியாததால் அது ஒரு தியரியாக மட்டுமே இருந்து வருகிறது.

***

ஆவி ஆய்வாளர் மையர்ஸ் இன்னொரு முறையில் விளக்கம் தருகிறார். டெலிபதி (தொலைவில் உணர்தல்) எண்ணங்கள்தான் ஆவிக்கு காரணம் என்கிறார் இவர். ஒருவர் ஆபத்தான நேரத்தில் யாரையாவது பார்க்கவோ, உதவி கோரவோ நினைத்தால் அவரது எண்ணங்கள் `டெலிபதி' முறையில் சம்பந்தப்பட்டவரை சென்றடையும். அப்போது அவர் முன்பு பாதிக்கப்பட்டவரின் உருவமும் தோன்றும். அதுதான் ஆவி என்கிறார் மையர்ஸ். இதற்கு அவர் சில உதாரணங்களைக் கூறி விளக்கினார். இந்தக் கருத்துக்களை விஞ்ஞானிகள் ஓரளவு ஏற்றுக்கொள்கிறார்கள்.

***

ஆவிகளுக்கு உடல் இல்லாமல் எப்படி உருவம் ஏற்படும்? தோன்றும் முன்பாக அவை எங்கே குடியிருக்கின்றன? என்பவை பேய் மறுப்பாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்விகள்.

இறந்தவரின் ஆன்மா ஆவியாக உருப்பெற்று அலைகிறது என்றால் இறப்பின் மர்மங்களை அவை மனிதனுக்கு விளக்க முடியுமே? ஒரு இடத்தில் இருக்கும் எந்த மனிதரையும் கவனிக்காமல் தான் பாட்டுக்கு கடந்து செல்கிறதே அவற்றுக்கு புத்திசாலித்தனம் கிடையாதா? உருவமற்ற அவை உடை அணிந்து தோன்றுமாமே? அவற்றுக்கு எதற்கு உடை? அவை எப்படி அணியும்? இவையும் அவர்களின் கேள்விகள்.

***

ஆவிகளை நம்பாத ஆய்வாளர்கள், எல்லா கூற்றுகளையுமே மறுக்கிறார்கள். எல்லாம் பிரமை என்கிறார்கள். வழிவழியாக கடத்தப்படும் கற்பனைகள் பிரமை உருவத்தை தோற்றுவிக்கக்கூடும் அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பது அவர்களின் கருத்து. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆவி ஆராய்ச்சி சூடுபிடித்தது. நவீன ஸ்கேனர்கள், கதிர்வீச்சுக் கேமரா, பேய்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட `ஸ்பைடர்' கருவி என அறிவியல் நவீனங்கள் கொண்டு ஆய்வாளர்கள் ஆவிகளைத் தேடுகிறார்கள். ஆனால் இதுவரை ஆவிகள் சிக்கவில்லை. அவை எழுப்பும் பீதியும் குறையவில்லை.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment