Monday, July 5, 2010

மூன்று சகோதரர்கள் .

சீனாவில் மூன்று சகோதரர்கள் இருந்தனர்.மூவருக்கும் அரைகுறைப் பார்வை.ஒரு நாள் இளையவர் சொன்னார்,''மூத்த அண்ணனுக்கு பார்வை மிகவும் மோசம்.எவ்வளவு பணம் கொடுக்கிறோம்,எவ்வளவு பணம் வாங்குகிறோம் என்பது கூடத் தெரிவதில்லை.எனவே இனி நான் பணப் பொறுப்புகளைப் பார்க்கிறேன்.''இரண்டாமவர் சொன்னார்,'உனக்கு மட்டும்  கண் பார்வை நன்றாக இருக்கிறதா?நம் மூவரில் எனக்குத் தான் கண் பார்வை நன்றாக இருக்கிறது.எனவே பணப் பொறுப்புகளை இனி நான் பார்ப்பது தான் சரி.' மூத்தவர் சொன்னார்,''எனக்கு உன் பார்வையில்நம்பிக்கை இல்லை.ஒன்று செய்வோம்.நம் ஊர்க் கோவிலில் இன்று இரவு ஒரு கற்பலகை வைக்கப்போகிரார்களாம்.அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை  யார் சரியாகப் படிக்கிறார்களோ அவரிடம் நிதிப் பொறுப்பைக் கொடுப்போம்.''மூவரும் ஒத்துக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து மூத்தவர் பிறர் அறியாமல் கோவிலுக்கு சென்று,அங்கிருந்த ஒரு பிக்குவிடம் அன்று இரவு வைக்கப் போகும் பலகையில் என்ன எழுதப் போகிறார்கள் என்ற விபரம் கேட்டார்.பிக்கு,''எப்போதும் நேர்மையுடன் இரு என்ற கன்பூசியஸின் பொன்மொழியை எழுதப் போகிறார்கள்,''என்றார்.தன்
புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டே அங்கிருந்து அவர் சென்ற சில நிமிடங்களில் இரண்டாமவர் கோவிலுக்கு வந்தார். அவரும் பிக்குவிடம் விபரம் கேட்க அவரும் தான் ஏற்கனவே சொன்னதையே சொன்னார்.'பலகையை சுற்றி ஏதேனும் அலங்காரம் செய்வீர்களா?'என்று அவர் கேட்க பிக்குவும் பொன்மொழியைச் சுற்றி பூக்களை வரையப் போகிறார்கள் என்றார்.மகிழ்ச்சியுடன் இரண்டாவது சகோதரர் வெளியேறினார்.அடுத்து  இளையவர் அங்கு வந்து இரண்டாமவர் தெரிந்து கொண்ட விசயங்களுடன் பலகையில் அதைத்தானம் செய்பவரின்  பெயரும் பொறிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டார்.
மறு நாள் காலை மூன்று  பேரும் கோவிலுக்கு சென்றார்கள். ''இதோ இங்கு தான் பலகை வைக்கப்பட்டிருக்கிறது.என்னால் அதைப் படிக்க முடிகிறது.எப்போதும் நேர்மையாய் இரு என்று எழுதப்பட்டிருக்கிறது.''என்றார்.இரண்டாமவர் சொன்னார்,'உன் பார்வை அவ்வளவு தானா?அதைசுற்றி அலங்காரமாகப் பூக்கள் வரையப்பட்டிருப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.'மூத்தவருக்கோ திகைப்பு.இளையவர் இப்போது பேசினார்,''பரவாயில்லை.இதில் வேறு  ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா?''என்று கேட்க இரண்டாமவர் அதிர்ச்சியுடன் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்டார்.''இப்பலகையை வைக்க ஏற்பாடு செய்த வாங் லீயின் பெயர்  கீழே ஓரத்தில் எழுதப் பட்டிருக்கிறது.'' என்று பெருமையோடு சொன்னார் இளையவர்.அப்போது முதல் நாள் மாலை அவர்கள் பார்த்த பிக்கு அங்கு வந்தார்.இவர்களைப் பார்த்தவுடன்,''ஓ,நீங்கள் பலகையைப் பார்க்க வந்தீர்களா?நேற்று இரவு இங்கு அதை வைக்க முடியவில்லை.இன்று இரவுதான் அந்த வேலை முடியும்.''என்று கூறிச் சென்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment