Friday, July 2, 2010

வழி கிடைக்கும்

கோபால் சரியான சாப்பாட்டு  ராமன்.ஏதாவது விருந்துக்குச் சென்றால் ஒரு பிடி பிடித்துவிடுவான்.அவனைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசர்,அவன் எவ்வளவு தான் சாப்பிடுகிறான் என்பதை அறிய ஆவல்  கொண்டு ஒரு விருந்துக்கு அவனை அழைத்தார்.கோபாலும் மூன்று பேர் சாப்பிடக்கூடிய அளவு சாப்பிட்டு விட்டு ஒரு பெரிய  ஏப்பம் விட்டான்.'போதுமா?'என்று அரசர் கேட்டார்.''ஒரு பருக்கை நுழையக்கூட  இடம்  இல்லை,மகாராஜா!''என்றான் கோபால்.அப்போது ஒரு தட்டில் அருமையான  மாம்பழங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வந்தான் ஒரு சேவகன்.மாம்பழத்தைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊற,வேகமாகத் தட்டைப் பிடுங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.''என்ன ஆச்சரியம்!இப்போது தான் ஒரு பருக்கை கூட நுழைய  இடம் இல்லை என்றாய்.ஆனால் இப்போது மூன்று மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டு விட்டாய்.இதற்கென்ன சொல்கிறாய்?''என்று கேட்டார் மன்னர்.கோபால் சொன்னான், ''இது  ஒரு பெரிய விஷயம் இல்லை,மகாராஜா!மகாராஜா பிறந்த நாளன்று கோவிலுக்குப் போகும் போது,அங்கு எள் கூட விழ முடியாத  அளவுக்குக் கூட்டம் இருக்கும்.ஆனாலும் தாங்கள் குதிரையில் வரும்போது,மகாராஜா வருகிறார் என்று சொல்லி கூட்டம் வழி கொடுக்கும்.அதுபோல வயிற்றில் இடம் இல்லையென்றாலும் ,பழங்களின் ராஜாவான மாம்பழம் வரும்போது வயிற்றில் இடம் கிடைக்காமலா போய்விடும்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

டிக்கெட்

மதுரை புகைவண்டி நிலையத்தில் , மூன்று இளைஞர்கள்,மூன்று  டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் புகை வண்டியில் ஏறினர்.பின்னாலேயே வேறு மூன்று பேர் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டு அவர்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறியதைப் பார்த்தனர்.அவர்களிடம்,'ஒரு டிக்கெட் வாங்கி,மூன்று பேர் எப்படி பயணம் செய்வீர்கள்?'என்று கேட்டனர்.''பொறுத்திருந்து பாருங்கள்,''என்று பதில் வந்தது.மூன்று டிக்கெட் வாங்கியவர்கள்,இருக்கையில் அமர்ந்தார்கள்.ஒரு டிக்கெட் மட்டும் வாங்கியவர்கள்மூவரும் கழிப்பறை யினுள் சென்று தாழிட்டனர்.சிறிது நேரத்தில்  டிக்கெட்  பரிசோதகர் வந்து பெட்டியிலிருந்த அனைவரிடமும் பரிசோதித்துவிட்டு,கழிப்பறையின் கதவைத் தட்டினார்.உடனே கதவு லேசாகத் திறந்தது..ஒரு கை ஒருடிக்கெட்டை வெளியே நீட்டியது.பரிசோதகர்  வாங்கிப் பார்த்துவிட்டு சென்று விட்டார்.சிறிது நேரம் சென்றபின் மூவரும் கழிப்பறையிலிருந்து வெளிவந்து இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.
ஒரு வாரம் கழித்து அந்த மூன்று இளைஞர்களும் மதுரை  திரும்ப ரயில் நிலையம் வந்தார்கள். தற்செயலாக,சென்னை வரும்போது உடன் வந்த மூன்று இளைஞர்கள் மதுரை செல்ல டிக்கெட் வாங்க நிற்பதைப் பார்த்தார்கள்.அவர்கள் இம்முறை ஒரு டிக்கெட் மட்டும் வாங்குவதைப் பார்த்தார்கள். இவர்கள் இப்போது ஒரு டிக்கெட்டும் வாங்காமலேயே புகைவண்டியில் ஏறினார்கள்.'ஒரு டிக்கெட் கூட இல்லாமல் எப்படி சமாளிப்பீர்கள்?'என்று இவர்களை அவர்கள் கேட்டார்கள்.அப்போதும்,''பொறுத்திருந்து பாருங்கள்,''என்று பதில் வந்தது.இப்போது ஒரு டிக்கெட் வாங்கிய மூவரும் வேகமாக ஒரு கழிப்பறையில் நுழைந்தனர்.டிக்கெட் ஏதும் வாங்காதவர்கள் வேறு ஒரு கழிப்பறையில் புகுந்தனர். வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில் டிக்கெட் எதுவும் வாங்காத மூவருள் ஒருவர் கழிப்பறையில் இருந்து வெளியே வந்தார்.அடுத்த கழிப்பறை கதவு தட்டி,'டிக்கெட் காண்பியுங்கள்,'என்று பரிசோதகர் போலக் கேட்டார்.கதவு லேசாகத் திறந்தது.ஒரு கை ,ஒரு டிக்கெட்டுடன் வெளி வந்தது.தட்டியவர்,அந்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு தன நண்பர்கள் இருந்த கழிப்பறையில் புகுந்து கொண்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, June 9, 2010

வெண்டைக்காய்

கணவனைக் காய் வாங்கி வரச் சொன்னாள் மனைவி.கணவனும் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.காயை வாங்கிப் பார்த்த மனைவி,''இது என்ன ,முத்தல் காயா வாங்கி வந்திருக்கீங்க?ஒரு காய் கூட வாங்கத் தெரியாதா?''என்று எரிந்து விழுந்தாள்.மறு நாள் கடைக்குப் போன கணவன் இளம் பிஞ்சாகப் பொறுக்கி வாங்கி வந்தான்.மனைவி,''வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக யாராவது வாங்குவாங்களா?அடுப்பில் ஒரு நொடியில்  கூழாகி விடுமே.இந்த சின்ன வேலைக்குக் கூட நீங்கள் லாயக்கில்லை.''என்று பொரிந்தாள் .அடுத்த நாள் கடைக்குப் போன கணவன்,இன்று எப்படியும் நல்ல பேர் வாங்கவேண்டும் என்று நினைத்து,கடையில் காய்வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காய்களாக வாங்கிக் கொண்டு கம்பீர நடை போட்டு வீடு வந்து சேர்ந்தான். வெண்டைக்காயைப் பார்த்ததும்மனைவிக்கு ஆக்ரோசமே வந்து விட்டது,''ஏனய்யா,உனக்கு வெண்டைக்காயை விட்டால் வேறு காயே தெரியாதா?''என்றாள்.கணவனுக்கு மயக்கம்வந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எப்போது வரலாம்?

ஒருவன் ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதலித்தான்.அவளிடம் தன விருப்பத்தைக் கூற நினைத்தான்.அவள் தினசரி கடை வீதி வழியே செல்வதுண்டு.அனால் கூடவே அவளுடைய தந்தையும் வருவார்.அவர் வராத  ஒரு நாள் பார்த்து அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.பல நாள் காத்திருந்ததன் பலனாக ஒரு நாள் அவள் தனியே வந்தாள்.நேரடியாக விசயத்தைச் சொன்னால் அதில் என்ன ஆவல் நிறைவேறும்?எனவே அவளைப் பார்த்து சொல்கிறான்:
ஒரு மரம் ஏறி,ஒரு மரம் பூசி 
ஒரு மரம் பிடித்து,ஒரு மரம் வீசிப் 
போகிறவன் பெண்ணே,உன் 
வீடு எங்கே?
அதன் பொருள்:ஒரு மரமாகிய பாதக் குறட்டுக் கட்டையின் மேலே ஏறி
(அந்தக் காலத்தில் செருப்பு மரத்தாலானதாக இருக்கும்.) ஒரு மரமாகிய சந்தனத்தைப் பூசிக் கொண்டு,ஒரு மரமாகிய கைத்தடியைப் பிடித்துக் கொண்டு,ஒரு மரமாகிய பனை ஓலை விசிறியை  வீசிக் கொண்டு செல்பவரின் பெண்ணே,உன் வீடு எங்கே இருக்கிறது?
அவன்பேசிய பேச்சின்  உட்கருத்தை அவள் புரிந்து கொண்டாளா? புரிந்து கொண்டதனால் உடனே பதில்  இதோ சொல்லி விட்டாளே!
பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே 
அவன் ஒரு நிமிடம் யோசித்தான்.அவனும் புரிந்து கொண்டான்.அதாவது அவள் வீடு பால் விற்கும் இடையன் வீட்டிற்கும்,பானை செய்யும் குயவன் வீட்டிற்கும் நடுவிலேயும்,ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும்,நூலைக்  கொண்டு நெசவு செய்யும் நெசவாளியின் வீட்டிற்கும் அருகில் இருக்கிறது.
அடுத்து அவன்,அவள் வீட்டிற்கு எப்போது வரலாம் என்று கேட்கிறான்.
அவள் சொல்கிறாள்:
இந்த ராஜா செத்து 
அந்த ராஜா பட்டம் 
கட்டிக் கொண்டு மரத்தோடு மரம் 
சேர்ந்த பிறகு வந்து சேர்
 அதாவது கதிரவன் மறைந்து,சந்திரன் உதயமான பிறகு,வீட்டில் உள்ளவர்கள்  கதவைச் சாத்தும் போது,கதவு நிலையும் கதவும் சேர்ந்து விடும்.அந்த சமயத்தில் அதாவது நள்ளிரவில் வருவாயாக என்று தெரிவிக்கிறாள் காதலி.
இனிப்பேச்சு எதற்கு?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, June 8, 2010

தாமதம்

சாலையின் நடுவில் பெயிண்ட் கொடு போட ஒருவர் நியமிக்கப் பட்டார்.முதல் நாள் ஐந்து கிலோமீட்டர் தூரமும்,இரண்டாம் நாள் மூன்று கிலோமீட்டர்தூரமும்,மூன்றாம் நாள் ஒரு கிலோ மீட்டர் தூரமும் அவர் பெயிண்ட் கொடு போட்டார்.நாளுக்கு நாள் வேலை தாமதமாவதைக் கண்ட அதிகாரி,அந்த ஆள் மீது நம்பிக்கை இருந்த போதும் கூப்பிட்டுக் கண்டித்தார். பெயிண்டும் கையுமாக நின்ற அந்த வேலையாள் சொன்னார்,''அதை ஏன் கேக்குறீங்க?நானும் நாளுக்கு நாள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் தான் உழைக்கிறேன்.ஆனால் பெயிண்ட் டப்பா இருக்கிற தூரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறதே!ஒவ்வொரு தடவையும் இவ்வளவு தூரம் போய் பிரஷ்ஷில் தொட்டுக் கொண்டு வர வேண்டியிருக்கிறதே!அதுதான் காரணம்.''அதிகாரிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net