Sunday, July 11, 2010

குடும்ப ரகசியம்

ஆப்கானிஷ்தானத்தின் அரசன் ஒரு போருக்கு தயார் செய்து கொண்டிருந்தான்.தனக்கு மிகக் கூர்மையான கத்தி ஒன்று செய்யச் சொல்லி ஆணையிட்டான்.ஒருவன் ஒரு கத்தியைக்  கொண்டு வந்து காட்டி,'வானத்தில் ஒரு முடியை எறிந்து அது இறங்கும் போது இக்கத்தியால் அதை இரண்டாக வெட்ட முடியும் என்று கூறி அதை செயல் படுத்திக் காட்டினனான்.அரசனுக்கு திருப்தி.அப்போது அங்கு அருகிலிருந்த ஒரு கண் பார்வையற்றவர்,'இது போருக்குப்  பயனற்றது,'என்றார்.அரசன்,''நீயார்?இது பயனற்றது என்று உனக்கு எப்படித் தெரியும்?''என்று கேட்டான்.'இந்த கத்தி கொண்டு வரப்படும் போது தற்செயலாக என்னை உரசிச் சென்றது.உடனே இது உடையக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டேன்.'என்று பார்வையற்றவர் சொன்னார்.அரசன் அதை சோதித்துப் பார்க்கையில் அது உடைந்து விட்டது.''நல்ல வேலை என்னைக் காப்பாற்றினாய்.இந்தக் கத்தியை வைத்து நான் போரிட்டிருந்தால் நன் உயிரோடு திரும்பியிருக்க முடியாது.சரி,நீ சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?''என்று அரசன் கேட்க பார்வையற்றவரும் தான் பிச்சை எடுப்பதாகக் கூறினார்.உடனே அரசன்,''நாளையிலிருந்து சாப்பாட்டு நேரத்தில் அரண்மனைக்கு வா.உனக்கு இரண்டு சப்பாத்தி கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்,''என்று கூற பார்வையற்றவரும் நன்றி கூறிச் சென்று விட்டார்.
பின் போரில் அரசன் வெற்றி பெற்று வந்தான்.அந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனின் அழகான பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தான்.திருமணத்தின் போது அந்தப் பார்வையற்ற பிச்சைக்காரனையும் பார்த்தான்.அவரைத் தனியே அழைத்து,'' ,''இந்தத் திருமணம் பற்றி என்ன நினைக்கிறாய்?''என்று கேட்டான்.அவரும்,'சில நாட்களுக்கு முன் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த காவலர்கள் என்னை விரட்டினார்கள்.ஆனால் இந்தப் பெண் என்னை தோளைப் பிடித்து அழைத்துச் சென்று எனக்கு சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்தாள்.என்னைத் தொட்டபோது அவளைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.அவள் உனக்கு நல்ல மனைவியாக இருப்பாள்.அவள் உங்களுக்கு மட்டுமே ஏற்றவள்.வேறு எந்த அரசருக்கும் ஏற்றவளாக இருக்க முடியாது.'என்றார்.அரசனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
சில மாதங்களுக்குப் பின் அந்த பார்வையற்றவரை  அழைத்து வரச் சொல்லி,அவரிடம்,''அன்று என் மனைவி எனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்று சொன்னாயே,அது பற்றி விபரமாகச் சொல்,''என்றான்.'தங்கள் மனைவி சிறந்த பெண்;ஆனால் அவள் பணக்கார வீட்டுப்பெண் அல்ல.அவளுடைய தந்தை ஒரு சாதாரண நெசவாளி.'என்ற பதில் வந்தது.அரசனுக்கு அதிர்ச்சி.தீவிர விசாரணையில் அவன் மனைவி ஒரு நெசவாளியின் பெண் என்பதும் பணக்காரரால் ஸ்வீகாரம் எடுக்கப்பட்டவள் என்பதும் தெரிய வந்தது.
அரசன் மீண்டும் பார்வையற்றவரை வரவழைத்து,''என் மனைவி எனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்றும் வேறு யாருக்கும் பொருத்தமாக மாட்டாள் என்றும் சொன்னதற்குக் காரணம் என்ன?''என்று கேட்டார்.'நீங்களும் அரச குடும்பத்தில் வந்தவரல்ல.உங்கள் தந்தை ஒரு சாதாரண வியாபாரி,''என்றார்.அரசனுக்கு மீண்டும் அதிர்ச்சி.ரகசியமாய் விசாரித்ததில் அது உண்மை என்பது தெரிந்தது.அவன் பார்வையற்றவரிடம்,''இதுவரை நீ சொன்னதெல்லாம் உன் தொடு உணர்ச்சியினால் தான்.ஆனால் என்னை இதுவரை என்னைத் தொட்டதில்லை.எப்படி என்னைப் பற்றி சரியாகச் சொன்னாய்?''என்று கேட்டார்.'நம்முடைய வார்த்தைகளும்  செயல்களும் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும்.நான் தங்கள் உயிரைக் காப்பாற்றினேன்.அதற்கு எனக்கு என்ன பரிசு?தினமும் இரண்டு சப்பாத்தி.அரச பரம்பரையில் வந்த ஒருவரானால், உயிரைக் காப்பாற்றியதற்கு மிகப் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பார்.அதனால் நீங்கள் அரச குடும்பத்தில் பிறந்திருக்கமுடியாது;ஒரு வியாபாரியின் பையனாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.'என்று விளக்கினார் அந்த பார்வையற்றவர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, July 10, 2010

தெளிவு

ஒரு நிறுவனத்தில் ஓய்வூதியத்  திட்டம் ஒன்றை செயல் படுத்த நினைத்தனர்.இந்தத் திட்டத்தை செயல்  படுத்த அனைத்து தொழிலாளர்களின் சம்மதமும் வேண்டும்.சம்மதம் தெரிவித்து ஜான் தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு விட்டனர்.அது ஒரு நல்ல திட்டம்.ஆனால் ஜான் கையெழுத்து இடாததால் செயல் படுத்த முடியவில்லை.
அவனது சக நண்பர்களும்,மேற்பார்வையாளரும்,மேலாளரும் விளக்கிக் கூறியும் ஜான் ஏற்றுக் கொள்ளவில்லை.முதலாளிக்குத் தகவல் தெரிந்ததும் ஜானை  அவர் அறைக்கு வரச்செய்து,''ஜான்,இதோ  பேனா.ஓய்வூதியத்  திட்டத்திற்கான இந்தத் தாள்களில் கையெழுத்திடு.நீ மறுத்தால் உன்னை வேலையை விட்டு நீக்க வேண்டியிருக்கும்.''என்றார்.ஜான் உடனே கையெழுத்திட்டான்.முதலாளி,ஏன் முதலில் கையெழுத்தப் போடவில்லை என்று கேட்டார்.ஜான் சொன்னான்,''இந்தத் திட்டத்தைப் பற்றி தங்களைப் போல யாரும் விளக்கமாகச் சொல்லவில்லை,முதலாளி.''என்றான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Friday, July 9, 2010

வேலைக்காரன்

ஆப்பிரிக்காவில் ஒரு கர்வம் மிகுந்த அரசன் இருந்தான்.ஒரு நாள் அரசவையில் அங்கிருந்த அனைவரையும் பார்த்து,''நான் தான் உலகின் அதிபதி.எல்லா மனிதரும் எனக்கு வேலைக்காரகளே,''என்றான்.'நீங்கள் சொல்வது தவறு.அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.அனைவருக்கும் அதிர்ச்சி.அரசன் கோபத்தில் வெடித்தான்,''என்னையும் வேலைக்காரன் என்று சொன்னது யார்?''கம்பை ஊன்றியபடி ஒரு வயதான மனிதன் முன்னால் வந்து,'நான்தான் சொன்னேன்.'என்றான்.நீயார் என்று அரசன் கேட்க,முதியவர் சொன்னார்,'நான் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்.எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லை.ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்ளவே இங்குவந்தேன்,'உடனே அரசன் ஏளனத்துடன் சொன்னான்,''அப்படியானால்,நீயே பிச்சை கேட்க வந்திருக்கிறாய்.ஆனால் என்னையும் வேலைக்காரன் என்று சொல்லும் அளவுக்கு உனக்குத்  திமிர்.''கிழவன் பயம் ஏதுமின்றி மீண்டும் சொன்னான்,'நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்கிறோம்.அதை என்னால் இப்போதே நிரூபிக்க முடியும்.'அரசன் சொன்னான்,''நீ மட்டும் அதை நிரூபித்து விட்டால் உன் ஊரில் ஒன்றல்ல,மூன்று கிணறு தோண்ட ஏற்பாடு செய்கிறேன்.''கிழவன் அமைதியாக''எங்கள் ஊரில் ஒரு பழக்கம் இருக்கிறது.ஒருவரின் சவாலை ஏற்றுக்கொள்ளும் போது,சவால் விட்டவரின் பாதத்தைத் தொட்டு வணங்க வேண்டும்.உங்கள் பாதத்தைத் தொட அனுமதியுங்கள்.''என்று கூறி அரசன் அனுமதித்ததும்,'இந்த ஊன்றுகோலை ஒரு நிமிடம் பிடியுங்கள்,'என்று கூற அரசனும் அதை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டான்.அரசனின் காலை வணங்கிவிட்டு,'இப்போது ஊன்று கோலைத் திரும்பக் கொடுங்கள்,'என்று சொல்ல அரசனும் அதைத் திரும்பக் கொடுத்தான்.உடனே கிழவன்,'இதைவிட என்னநிரூபணம் வேண்டும்?'என்று கேட்டான்.''என்ன நிரூபித்தாய்?''என்று அரசன் கேட்டான்.'இந்த ஊன்று கோலைப் பிடியுங்கள் என்றேன்.உடனே பிடித்துக் கொண்டீர்கள்.திரும்பக் கொடுங்கள் என்றேன்.உடனே திரும்பக் கொடுத்து விட்டீர்கள் .நான் சொன்ன மாதிரி நல்ல மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'என்றான் கிழவன்.அரசன் மிக்க மகிழ்ச்சியுடன் கிழவனின் ஊரில் மூன்று கிணறு தோண்ட ஆணையிட்டதோடு கிழவனையும் தன் ஆலோசகராக வைத்துக் கொண்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, July 7, 2010

வினோத ஒலி

ஒரு மனிதன் தன காரில்சென்று கொண்டிருக்கும் போது,இருட்டிவிட்டதால் அருகிலிருந்த புத்த மடாலயத்திற்கு சென்று இரவை அங்கு கழிக்கலாம் என்று கருதி,அங்கிருந்த புத்த பிக்குவை அணுகினான்.அவரும் அவனுக்கு நல்ல உணவளித்தார்.ஒரு நல்ல படுக்கை கொடுத்ததும் அவன் அலுப்பில் உடனே தூங்கி விட்டான்.நள்ளிரவில் ஒரு சப்தம் கேட்டதும் விழித்துக் கொண்டான்.அந்த சப்தம் அவனுடைய முதுகுத் தண்டை உறைய வைப்பதாக இருந்தது.சிறிது நேரம் கழித்து அந்த சப்தம் நின்று விட்டது.அதன் பின் அவனுக்கு தூக்கம் வரவில்லை.காலை எழுந்ததும்,அங்கிருந்த புத்த பிக்குகளிடம் அந்த வினோத  ஒலி பற்றிக் கேட்டான்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.ஒருவர் சொன்னார்,''நீங்கள் ஒரு புத்த பிக்கு இல்லை.எனவேஅது பற்றி உங்களுக்கு சொல்ல முடியாது.''அந்த மனிதன் பின் அவர்களிடம் விடை பெற்றான்.சிலஆண்டுகள் கழித்து அவன் அந்தப் பக்கம் வந்த போது அதே மடாலயத்தில் தங்க முடிவு  செய்தான்.புத்த பிக்குகளும் அவனுக்கு உணவளித்து,படுக்கையும் கொடுத்தனர்.அன்று  இரவும்  அவனுக்கு  அந்த  வினோத ஒலி கேட்டது.முதுகுத்தண்டு சில்லிட்டது.அவனால் தூங்க முடியவில்லை.காலை எழுந்ததும்புத்த பிக்குகளிடம் அந்த வினோத ஒலி பற்றிக் கூறக் கெஞ்சினான்.அவர்கள் இம்முறையும்,''நீங்கள் ஒரு புத்த பிக்கு இல்லை.எனவே அது பற்றி உங்களுக்குச் சொல்ல முடியாது,''என்றனர்.அவனுக்கு பைத்தியம் பிடித்து  விடும்  போல  இருந்தது.''இந்த உண்மை தெரிய நான் புத்த பிக்குவாக வேண்டுமானால் அதற்கும் நான் தயார்.நான்  என்ன செய்ய வேண்டும்?''என்று அவர்களிடம் அவன்கேட்டான்.
'' உன் உடமைகள் அனைத்தையும் துறந்து வா,''என்றனர் பிக்குகள். அவனும் அனைத்தையும் துறந்து அங்கு வர,அவனுக்குபிக்குகளுக்கானஉடையைக் கொடுத்தனர்.     ''இப்பொழுதாவது எனக்கு அந்த வினோத ஒலி பற்றிச் சொல்லுங்களேன்,''என்று அவர்களிடம் கேட்டான்.அவர்களும் ஒரு கதவைக் காட்டி,அதைத் திறந்து பார்த்துத் தெரிந்து கொள்ளச் சொல்லினர்.அவன் வேகமாய்ப்  போய் அந்தக் கதவைத் திறந்தான்.உள்ளே ஒரு கல் கதவு இருந்தது.அதைத் திறக்க,அதனுள் இரும்புக்  கதவு இருந்தது.அதையும் திறந்தால்,அதனுள் ஒரு வெள்ளிக் கதவு இருந்தது.அதையும் திறந்து உள்ளே பார்த்தபோது ஒலி எங்கிருந்து வந்தது  என்பது  அவனுக்குத்  தெரிந்தது.அதைப் பார்த்ததும் அவனுக்குப் பயம் வந்து விட்டது.அவன்   அலறி ,ஓட முயற்சி செய்த  போது  பயத்தில் அவனால் அங்கிருந்து நகர முடியவில்லை.'அவன் அங்கு என்ன பார்த்தான்? அந்த ஒலி எங்கிருந்து வந்தது?என்று கேட்கிறீர்களா?மன்னிக்கவும்.நீங்கள் ஒரு புத்தபிக்கு இல்லை.எனவே அது பற்றி உங்களுக்குச் சொல்ல முடியாது.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உண்மையான பக்தி

ஒருகண் பார்வை இல்லாதவர்  கோவிலுக்கு  வந்தார்.பூசாரி கேட்டார்,''ஐயா,உங்களுக்குத்தான் கண் தெரியாதே?மலை ஏறி வரிசையில் நின்று இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே,கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்?''பார்வை அற்றவர் சொன்னார்,''ஐயா,நான் கடவுளை தரிசிப்பதில் அவருக்கு என்ன ஆதாயம்?கடவுள் என்னைப் பார்த்தால் போதும்.என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும் என்று  நம்பித்தான்  வந்திருக்கிறேன்.''
இது தான் உண்மையான பக்தி;உண்மையான ஆர்வம்;உண்மையான நம்பிக்கை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net