Sunday, December 19, 2010

யாரிடம் பயம்?

ஒரு முறை சில வேடர்கள் காட்டு யானைகளை பிடிக்க காட்டுக்குள் சென்றனர்.பழக்கப்பட்ட சில யானைகளை உடன் அழைத்துக்கொண்டு கையில் கயிறுகள் மற்றும் ஆயுதங்களுடன் போனார்கள்.வேடர்கள் வருவதைப் பார்த்த காட்டு யானைகள் ,''நாம் வேடர்களைக் கண்டு பயப்படவில்லை.அவர்கள் கையில் வைத்துள்ள பாசக் கயறுகளைப் பார்த்தும் கவலைப் படவில்லை.அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப் பற்றியும் கவலையில்லை.ஆனால் தம்முடன் அந்த மனிதர்கள் அழைத்து வந்திருக்கும் நம் இனத்தவரான நாட்டு யானைகளைக் கண்டு தான் நாம் பயப்பட வேண்டியிருக்கிறது.நம்மை எவ்வாறு பிடிக்கலாம் என்னும் உபாயத்தை நாட்டு யானைகள் தான் அந்த வேடர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றன.ஆகவே மற்ற பயத்தைக் காட்டிலும் உறவினருக்கு இருக்கும் பங்காளிக் காய்ச்சலைக் கண்டு தான் நாம் பெரிதும் பயப்பட வேண்டியுள்ளது.''என்று தமக்குள்ள பேசிக்கொண்டன.

வழி

போஸ்ட் ஆபீசிற்கு போக வழி தெரியாத ஒரு பாதிரியாருக்கு ,வழி காட்டினான் பையன் ஒருவன்.நன்றி கூறிய பாதிரியார் பையனிடம் சொன்னார்,
''உனக்கு சொர்க்கம் போகும் வழி சொல்கிறேன்.''பையன் சொன்னான்,''இதோ இருக்கும் போஸ்ட் ஆபீசுக்கு வழி தெரியாத நீங்களா ,சொர்க்கத்திற்கு வழி கட்டப் போகிறீர்கள்?''

தியாகம்

தியாகம் பற்றி இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.ஒருவன் சொன்னான்,
''என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் உனக்கு ஒரு லட்சம் கொடுப்பேன்.''இரண்டாமவன் சொன்னான்,''என்னிடம் இரண்டு பங்களா இருந்தால் உனக்கு ஒன்று கொடுப்பேன்.''
முதல்வன் இரண்டாமவனின் பையில் இரண்டு பேனா இருப்பதைக் கண்டு ஒன்றைக் கேட்டான்.இரண்டாமவன் முதல்வனின் பையில் இருபது ரூபாய் இருப்பதைப் பார்த்து பத்து ரூபாய் கேட்டான்.அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தில் இல்லை.இல்லாததைக் கொடுப்பதில் தான் எவ்வளவு தியாக மனப்பான்மை?

குறை

ஒரு பெண், பெரியவர் ஒருவரிடம் தன கணவன் மிகக் கொடுமைகள் செய்வதாகப் புகார் சொன்னாள்.பெரியவர் சொன்னார்,''ஒரு பேப்பரை எடுத்து உன் கணவன் உனக்கு செய்த நல்ல காரியங்களையும் ,செய்த கொடுமைகளையும் தனித்தனியே எழுதிக் கொண்டு வா.அதைப் படித்து விட்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.''என்றார்.
பெண்ணும் ஒரு பேப்பரை எடுத்து முதலில் தன கணவன் செய்த நல்ல காரியங்களை யோசித்து எழுதி முடித்தாள்.அப்போது அவளுக்குத் தோன்றியது,''சே!இவ்வளவு நல்ல காரியங்கள் செய்த என் கணவரையா குறை கூறுகிறேன்?''என்று வருத்தப்பட்டாள்.

இனிமையோடு பழக

மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்காது,உங்களைக் குறை கூறுவார்கள் என்று நினைக்காதீர்கள். அவரவர்க்கு அவரவர் பிழைப்பைக் கவனிக்கும் வேலையே தலைக்கு மேல் இருக்கிறது.உங்களை வெறுத்துக் கொண்டிருக்கவோ குறை கூறவோ அவர்களுக்கு நேரமில்லை.நீங்களாக ஏதாவது கோளாறாக நடந்து கொண்டாலன்றி உங்களைப் பற்றி அவர்கள் ஏன்சிந்திக்கப் போகிறார்கள்?
மற்றவர்களை அனுசரித்துப் போனால் நீங்கள் இன்னும் நன்றாக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.
மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் இளக்கார மானவர்அல்ல என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ மற்றவர்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்களாக இருக்க முயல வேண்டும் என்றோ எண்ணி எல்லாவற்றிலும் போட்டி போட வேண்டாம்.
பேசுவது நீங்களாகவே இருக்க வேண்டும் ,கேட்பதற்கு மட்டும் மற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்.உரையாடலின் போது மற்றவர்கள் பேசுவதற்குக் காது
கொடுத்து அவர்கள் பேச்சைக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.