Wednesday, July 7, 2010

வினோத ஒலி

ஒரு மனிதன் தன காரில்சென்று கொண்டிருக்கும் போது,இருட்டிவிட்டதால் அருகிலிருந்த புத்த மடாலயத்திற்கு சென்று இரவை அங்கு கழிக்கலாம் என்று கருதி,அங்கிருந்த புத்த பிக்குவை அணுகினான்.அவரும் அவனுக்கு நல்ல உணவளித்தார்.ஒரு நல்ல படுக்கை கொடுத்ததும் அவன் அலுப்பில் உடனே தூங்கி விட்டான்.நள்ளிரவில் ஒரு சப்தம் கேட்டதும் விழித்துக் கொண்டான்.அந்த சப்தம் அவனுடைய முதுகுத் தண்டை உறைய வைப்பதாக இருந்தது.சிறிது நேரம் கழித்து அந்த சப்தம் நின்று விட்டது.அதன் பின் அவனுக்கு தூக்கம் வரவில்லை.காலை எழுந்ததும்,அங்கிருந்த புத்த பிக்குகளிடம் அந்த வினோத  ஒலி பற்றிக் கேட்டான்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.ஒருவர் சொன்னார்,''நீங்கள் ஒரு புத்த பிக்கு இல்லை.எனவேஅது பற்றி உங்களுக்கு சொல்ல முடியாது.''அந்த மனிதன் பின் அவர்களிடம் விடை பெற்றான்.சிலஆண்டுகள் கழித்து அவன் அந்தப் பக்கம் வந்த போது அதே மடாலயத்தில் தங்க முடிவு  செய்தான்.புத்த பிக்குகளும் அவனுக்கு உணவளித்து,படுக்கையும் கொடுத்தனர்.அன்று  இரவும்  அவனுக்கு  அந்த  வினோத ஒலி கேட்டது.முதுகுத்தண்டு சில்லிட்டது.அவனால் தூங்க முடியவில்லை.காலை எழுந்ததும்புத்த பிக்குகளிடம் அந்த வினோத ஒலி பற்றிக் கூறக் கெஞ்சினான்.அவர்கள் இம்முறையும்,''நீங்கள் ஒரு புத்த பிக்கு இல்லை.எனவே அது பற்றி உங்களுக்குச் சொல்ல முடியாது,''என்றனர்.அவனுக்கு பைத்தியம் பிடித்து  விடும்  போல  இருந்தது.''இந்த உண்மை தெரிய நான் புத்த பிக்குவாக வேண்டுமானால் அதற்கும் நான் தயார்.நான்  என்ன செய்ய வேண்டும்?''என்று அவர்களிடம் அவன்கேட்டான்.
'' உன் உடமைகள் அனைத்தையும் துறந்து வா,''என்றனர் பிக்குகள். அவனும் அனைத்தையும் துறந்து அங்கு வர,அவனுக்குபிக்குகளுக்கானஉடையைக் கொடுத்தனர்.     ''இப்பொழுதாவது எனக்கு அந்த வினோத ஒலி பற்றிச் சொல்லுங்களேன்,''என்று அவர்களிடம் கேட்டான்.அவர்களும் ஒரு கதவைக் காட்டி,அதைத் திறந்து பார்த்துத் தெரிந்து கொள்ளச் சொல்லினர்.அவன் வேகமாய்ப்  போய் அந்தக் கதவைத் திறந்தான்.உள்ளே ஒரு கல் கதவு இருந்தது.அதைத் திறக்க,அதனுள் இரும்புக்  கதவு இருந்தது.அதையும் திறந்தால்,அதனுள் ஒரு வெள்ளிக் கதவு இருந்தது.அதையும் திறந்து உள்ளே பார்த்தபோது ஒலி எங்கிருந்து வந்தது  என்பது  அவனுக்குத்  தெரிந்தது.அதைப் பார்த்ததும் அவனுக்குப் பயம் வந்து விட்டது.அவன்   அலறி ,ஓட முயற்சி செய்த  போது  பயத்தில் அவனால் அங்கிருந்து நகர முடியவில்லை.'அவன் அங்கு என்ன பார்த்தான்? அந்த ஒலி எங்கிருந்து வந்தது?என்று கேட்கிறீர்களா?மன்னிக்கவும்.நீங்கள் ஒரு புத்தபிக்கு இல்லை.எனவே அது பற்றி உங்களுக்குச் சொல்ல முடியாது.'

உண்மையான பக்தி

ஒருகண் பார்வை இல்லாதவர்  கோவிலுக்கு  வந்தார்.பூசாரி கேட்டார்,''ஐயா,உங்களுக்குத்தான் கண் தெரியாதே?மலை ஏறி வரிசையில் நின்று இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே,கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்?''பார்வை அற்றவர் சொன்னார்,''ஐயா,நான் கடவுளை தரிசிப்பதில் அவருக்கு என்ன ஆதாயம்?கடவுள் என்னைப் பார்த்தால் போதும்.என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும் என்று  நம்பித்தான்  வந்திருக்கிறேன்.''
இது தான் உண்மையான பக்தி;உண்மையான ஆர்வம்;உண்மையான நம்பிக்கை.