Thursday, May 20, 2010

துறவறம்

ஒரு வயதான கணவனும் மனைவியும் துறவறம் செல்லத் தீர்மானித்து வீடு சொத்து எல்லாவற்றையும் விட்டு வெளியேறினர்.சிறிது தூரம் சென்ற போது பாதையில் ஒரு வைரக்கல் கீழே கிடப்பதை கணவர் பார்த்தார்.தன மனைவி அதைப் பார்த்தால் அவளுக்கு அதன் மீது ஆசை வந்து விடுமோ என்று பயந்து விரைந்து சென்று தன காலுக்கடியில் அதை மறைத்தார்.அவருடைய நடவடிக்கை மனைவிக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.என்ன விஷயம் என்று வலியுறுத்திக் கேட்டதால் கணவர் உண்மையைச் சொன்னார்.மனைவி சொன்னார்,''வாருங்கள்,வீட்டுக்குப் போகலாம்.இன்னும் உங்களுக்கு வைரக் கல்லுக்கும் சாதாக் கல்லுக்கும் வித்தியாசம் தெரிகிறது.எனவே உங்களுக்கு துறவறம் போகக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை என்பது தெளிவாகிறது.அந்தப் பக்குவத்தை அடைந்தபின் நாம் துறவறம் செல்வோம்.''

லைலா மஜ்னு

லைலா மஜ்னு என்றாலே அழியாக் காதல் ஞாபகம் வரும்.உண்மையில்  மஜ்னு என்றால்  பைத்தியம் என்று பொருள்.அவனுடைய இயற்பெயர்  கயஸ் என்பதாகும்.லைலாவின் மீது கொண்டிருந்த காதல் பைத்தியத்தின் காரணமாக அவனை மஜ்னு என்று அழைத்தார்கள்.லைலா மஜ்னு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் காதல் எல்லோராலும் பேசப்பட்டது.கிராமப்புறங்களில் அவர்கள் காதல் பற்றிப் பாடல்கள் கூடப் பாடி வந்தனர்.இவர்கள் காதலைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியின் மன்னர், கயஸ்அந்த அளவுக்கு காதலித்த லைலா எப்படி இருப்பாள் என்று பார்க்க ஆசைப்பட்டார்.லைலாவைப் பார்த்த மன்னர் கயசை வரவழைத்து,''இந்தப்பெண் அப்படி ஒன்றும் அழகாகவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவோ இல்லையே!நீ ஏன் அவள் பின் பைத்தியமாகத் திரிகிறாய்?உனக்கு இவளைவிட எல்லா வகையிலும் சிறந்த பெண்ணைப் பார்த்து உனக்கு நான் கல்யாணம் செய்து வைக்கிறேன்.''என்று சொன்னார்.கயஸ் சொன்னான்,''லைலாவின் அழகை கயஷின்கண் கொண்டு பார்த்தால் தான் தெரியும்.வேறு கண்களுக்கு அவளின் அழகும் பெருமையும் தெரியாது.''