Wednesday, May 19, 2010

அதிக விலை

பாலஸ்தீன நாட்டுக்கு ஒருவர் உல்லாசப் பயணம் சென்றார்.அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது.இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை.படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும் என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.இருபதுடாலர் என்று அவன் சொன்னான்.இந்த தொகை மிகவும் அதிகம் என்று வாதிட்டார்,பயணி.''அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.''என்றான் படகோட்டி.'நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்.'என்றார் பயணி.''ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார்,தெரியுமா?''என்று கேட்டான் படகோட்டி.''.படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால்,நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!''என்று ஒரு  போடு போட்டார் பயணி.

அழைப்பு

வயதான மனிதன் ஒருவன்,காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போது,முடியவில்லை.நொந்து போய்,''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?எமதர்மா!எமதர்மா,''என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,'அப்பனே,என்னை நீ அழைத்த காரணம் என்ன?'என்று கேட்டான்.திடுக்கிட்ட வயதான அந்த விறகு வெட்டி,''ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்,''என்றாராம்.உயிர் என்றால் யாருக்கும் வெல்லக்கட்டி தானே!