Sunday, April 3, 2011

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள் !

மனித உறுப்புக்களில் முக்கியமானவற்றில் ஒன்று கால்கள்.





மொத்தம் 52 எலும்புகளின் ஒத்துழைப்போடு கால்கள் செயல்பட்டு வருகின்றன. 33 மூட்டுக்கள் உள்ளன. 38 தசைநார்கள் கால்களை இயக்க செயல்படுகின்றன.

*

"மனிதனின் கால்கள் இயங்கும் விதம் ஆச்சரியமளிக்கிறது. அது இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு' என்று மருத்துவர்கள் கூறுவர்.

*


கால்களை பொறுத்தவரையில் மொத்தம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வியர்வை சுரப்பிகள் செயல்படுகின்றன. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் முறை அடி எடுத்து வைத்து நடப்பதாக ஆய்வுகள் கூறி ஆச்சரியப்படுத்துகின்றன.

*

தன் ஆயுள் காலத்தில் கால்களை பயன்படுத்தி ஒருவர் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கி.மீ., துரத்தை கடக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி.

*


மனித உறுப்புகளிலேயே கால்கள் தான் அதிகமான எடையை எப்போதும் தாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. மனிதன் சுமக்கும் கூடுதல் எடைகளையும் கால்கள் மட்டுமே தாங்கிக் கொள்கின்றன.

*

அதுமட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் நீரிழிவு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த ஓட்டத்தில் குறைபாடு போன்றவைகளுக்கு கால்களும் ஒரு காரணமாகவே உள்ளன.

*


இப்படி பல்வேறு வகைகளில் முக்கியமான கால்களில் பிரச்னை ஏற்படுவது பொதுவானது. ஆனால், அவை பெரும்பாலான மக்களால் அலட்சியப்படுத்தப்படுகின்றன. கால்களை சரிவர பராமரிக்காவிட்டால் அது உடலில் பல்வேறு பாகங்களை பாதிக்கும் என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம்.

*


"உங்களுடைய கால்கள் ரணமானால், உங்களுடைய உடம்பும் ரணமாகும்' என்பது ஒரு மருத்துவ பழமொழி. எனவே, கால்களை பராமரிக்க வேண்டியது மிக அவசியம்.

*

பொதுவாக, கால்களில் வெடிப்பு, பூஞ்சாள பாதிப்பு, ஆணி, தட்டைக்கால், கொப்புளங்கள், உலர்ந்த தோல் போன்ற பாதிப்புக்கள்தான் அதிகமாக தென்படுகின்றன.

*


ஈரப்பதம் குறைவாகும் காரணத்தால் கால்களில் உள்ள தோல் பகுதியில் வறட்சி ஏற்படுகிறது. பாதங்களில் ஏற்படும் வெடிப்பு காரணமாக, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், வெடிப்பு காரணமாக தாங்க முடியாத வலியும் ஏற்படும்.

*


கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

*

இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் "அல்சராக' மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

*


ஒவ்வொருவரும் மற்ற உறுப்பு களைப் போலவே கால்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். கால்களை பராமரிப்பதற்காக டாக்டர் ஸ்கூல்ஸ் என்ற வெளிநாட்டு நிபுணர் கூறிய சில "டிப்ஸ்'.

***

இதோ:

1. கால்களில் வலி ஏற்பட்டால் அது மற்ற நோய்க்கு அறிகுறி என்பதால் அதை அலட்சியப்படுத்தாதீர். உடனே மருத்துவரை பாருங்கள்.

*

2. தினமும் கால்களை வெதுவெதுப்பான நீரில் சோப் மூலம் சுத்தம் செய்யுங்கள். இந்த முறையில் கால்களை நீரில் மூழ்க வைக்காதீர். அது வறட்சியை ஏற்படுத்திவிடும்.

*

3. ஈரமான கால்களை துடைக்கும் போது மறக்காமல் கால் விரல்களுக்கு இடையில் உள்ள பாகத்தையும் சுத்தப்படுத்துங்கள். அப்போதுதான் பூஞ்ச காளான் பாதிப்பில் இருந்து கால்கள் தப்பிக்கும்.


*


4. துடைத்த பின்னர் விரல் இடுக்குகளை தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் ஈரப்பதம் தரும் கிரீம்களை தடவுங்கள். இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புக்களை தடுக்கும்.

*
5. கால்களில் காய்ந்த பகுதிகள் ஏதேனும் தென்பட்டால் அதை பக்குவமாக அகற்றி விடுங்கள். கால் ஆணி, கால் கட்டி போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அவற்றை அகற்றி விடுங்கல்.

*

6. நீங்களாகவே இவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்; அது வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

*


7. குறிப்பிட்ட நாட்களில் கால் விரல் நகங்களை அகற்றுங்கள். இதற்காக பிளேடு, கத்தி போன்றவற்றை பயன்படுத்தாமல், "நெய்ல்கட்டர்'களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*

8. வெறும் காலில் நடப்பதை தவிருங்கள். புதிய காலணிகளை குறிப்பாக ஷக்களை வாங்கும் போது உங்கள் கால் அளவை விட கொஞ்சம் பெரியவையாக வாங்கி பயன்படுத்துங்கள்.

*


9. இறுக்கமான காலணிகள் அணிவதை தவிருங்கள். காட்டன் "சாக்ஸ்'களை மட்டுமே பயன்படுத்துங்கள். ஹீல்ஸ் காலணிகள் எப்போதும் ஏற்புடையதல்ல.

*


10. இதை பின்பற்றினாலே போதும், கால்களால் எந்த பிரச்னையும் வராது.

***

எழுதியவர்: எஸ்.உமாபதி
நன்றி: தினமணி

***

"வாழ்க வளமுடன்"


***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment